காலை 6 மணிக்கு கல்லடி பாலத்தருகேயிருந்து பயணம் மயில்தங்கிய மலையை நோக்கியதாக இருந்தது. அன்றைய நாள் சனிக்கிழமை ஓய்வு நாள் என்பதால் நண்பன் பவித்தினும் சைக்கிள் பயணத்தில் இணைத்துக்கொண்டார். ஒரு மணித்தியாலத்தில் 15 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்வது தான் இலக்கு அதிக வேகத்தில் சென்று பயன் ஏதும் இல்லை. வழமை போல போகும் வழியிலேயே கண்ணில் காண்பதெல்லாம் நின்று பார்த்து அனுபவித்துக்கொண்டே செல்வோம்.
பிள்ளையாரடியில் கும்பிட்டுவிட்டு பயணம் தொடர்ந்தது. சத்துருகொண்டானினால் செல்லும் போது வழமைக்கு மாறாக குடும்பி மலையின் தோற்றம் மிகவும் தெளிவாக தெரியவே அதனையும் பார்த்து படம் பிடித்துக்கொண்டே திருமலை வீதியால் சென்றுகொண்டிருந்தோம்.
“அண்ணா, பம் கொஞ்சம் தருவியளா” என எதிர்திசையில் பயணித்த சிறுவனிடமிருந்து சத்தம் ஒன்று வந்தது. நாமும் சைக்கிளை அவன் இருக்கும் பக்கம் திருப்பி கொண்டு வந்து பார்க்கும் போது தான் தெரிந்தது அவன் செங்கலடியில் இருந்து சத்துருக்கொண்டான் வரை காற்று அடிக்க இடமில்லாமல் ஓடி வந்திருக்கிறான். நாமும் இயலுமானவரை காற்று அடித்து கொடுத்தோம் என்றாலும் அவன் நிறைய தூரம் காற்று இன்றி ஓடி வந்தமையால் டியூப் உம் பழுதடைந்து இருந்தது. அதனால் தொடர்ந்து காற்று அடித்தும் பிரயோசனமில்லை.
கவலையுடன் தூரம் கடந்தது தன்னாமுனை, மயிலம்பாவெளி தாண்டி ஆறுமுகத்தான் குடியிருப்பில் காலை சாப்பாட்டுக்காக மரக்கறி ரொட்டியும், வண்டப்பமும் வாங்கினோம். மரக்கறி ரொட்டி 40 ரூபாய் ஆகவும் வண்டப்பம் 30 ரூபாய் ஆகவும் இருந்தது. வாங்கி சைக்கிளில் கொழுவிக்கொண்டு ஏறாவூர், செங்கலடி, கொம்மாதுறை கடந்து கிழக்கு பல்கலைக்கழகத்தின் அழகினையும் ரசித்துக்கொண்டு வந்தாறுமூலையின் அம்பலத்தடியில் இருக்கும் கண்ணகி அம்மன் கோவிலில் சற்று இளைப்பாறினோம்.

மட்டக்களப்பில் கொம்பு முறி விளையாட்டு தற்போதும் நடக்கும் கண்ணகி அம்மன் கோவில்களில் மிகவும் முக்கியமானது இந்த கோவில்.
கண்ணகியையும், அருகே பிள்ளையாரையும் தரிசித்தபின்னர் அருகே இருக்கும் உழவர்சிலையினை வரவேற்பு கோபுரமாகவும் கொண்ட அம்பலத்தடியில் இருந்து மயிலவெட்டுவான் துறை நோக்கிய கொங்கிறீட் வீதியால் சென்று சிவத்தப்பாலத்தடியை அடைந்தோம்.
சிவத்தப்பாலத்தின் மேல் ஏறி நின்று பார்த்தால் அந்த முழு இடத்தினையும் பறவைகள் போல மேல் இருந்து பார்க்கலாம் .
அழகிய சூழல், மெய்மறக்கச்செய்யும் காற்று என முழுமையாயாக கிராமப்புற சூழல் எம்மை வரவேற்கும்.
தொடர்ந்து செல்லும்போது கால்வாய்களில் நீர் நிரம்பி ஓடிக்கொண்டிருந்தது அதனருகே இருந்து காலை சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு ஆங்காங்கே காணும் ஊர் மக்களுடன் கதைத்துக்கொண்டே மயிலவெட்டுவான் துறைக்கு வந்து சேர்ந்தோம்.

மயிலவெட்டுவான் துறையில் இரு தோணிகளை ஒன்றாக பிணைத்தவாறு ஒரு பாதை உருவாக்கப்பட்டிருந்தது. எனினும் பாதை செலுத்துபவர்கள் யாரையுமே அந்த இடத்தில் காணவில்லை. மீண்டும் ஊர் மக்களிடம் சென்று விசாரிக்கும் போது சற்று தூரத்தில் நீர் மட்டம் குறைந்ததொரு இடம் இருப்பதாகவும் அதன் மூலம் நடந்து நீர்நிலையை கடக்க இயலுமா இருக்குமெனவும் கூறப்பட்டது.
யானை வேலி ஒன்றின் கீழாக புகுந்தே நாம் அந்த முந்தனி ஆற்றின் ஆழம் குறைந்த பகுதியை கடப்பதற்கு செல்ல வேண்டியிருந்தது. யானை வேலியை தாண்டியதும் அனைத்தும் பற்றை காடாகவே இருந்தது. அதில் ஓர் ஒற்றையடிப்பாதை வழியாக சைக்கிளை உருட்டிக்கொண்டே அண்ணளவாக 50 மீற்றர் தூரமான ஆற்றினை முழங்கால் அளவு நீருடன் கடந்தோம்.

ஆற்றை கடந்து அக்கரைக்கு சென்றதும் பாதை மிகவும் ஏற்றமாக இருந்தமையால் சைக்கிளை உருட்டிக்கொண்டே தொடர்ந்து நடந்துகொண்டிருந்தோம். இது ஆற்றில் மண் எடுக்கும் இடம். மண் தோண்டுவதற்காக குத்தகைக்கு எடுத்த நிறுவனத்தின் பெயர்பலகையுடன் ஓர் இடத்தையும் எம்மால் காண முடிந்தது.
ஈரலைக்குளம் கிராமத்தினை வந்தடைந்து தொடர்ந்து பயணம் செய்கையில் நாகதம்பிரான் கோவிலடி சந்தியில் வைத்து பாதை இரண்டாக பிரிகிறது. வலப்புறம் மயில்தங்கிய மலை இடப்புறம் சென்றால் வேலோடுமலை. இன்றய பயணத்தின் நோக்கம் மயில்தங்கிய மலை தான் எனவே எமது பயணம் வலப்புறமாக தொடர்ந்தது.
கிறவல் வீதி தான் , சில இடங்கள் மணலால் நிரம்பியதாகவும் இருந்ததுடன் வீதி மலை நோக்கி ஏற்றமாக செல்வத்தையும் இலகுவில் உணர முடிந்தது. இந்த வீதி தொடர்ந்து சென்று கடைசி மலையில் முடிவடையும் என கேள்விப்பட்டோம்.
வீதியின் இருபுறமும் காடுகள் தான் எந்த நேரத்திலும் காட்டு விலங்குகள் குறுக்கறுக்கக் கூடும். அனைத்து மலைப்பயணங்களிலும் நாம் எதிர்நோக்கும் சவால் இது. ஏற்றங்களில் ஏறும் போது ஒரே ஒரு மன நிம்மதி, திரும்ப வரும் வழியில் இந்த ஏற்றங்கள் எல்லாம் இறக்கமாகியிருக்கும் அதனை ஏறுவதை போல 3 மடங்கு வேகத்தில் கடக்கலாம் என்பது தான்.
கடைசி மலைக்கு செல்லும் வழியில் வேப்பமரத்தடியில் வழிப்பிள்ளையார் இருப்பர் என்பது தான் எமக்கு ஊர் மக்களால் மலைக்கு செல்வதற்கு சொல்லப்பட்ட அடையாளம். அவர்கள் சொன்னது போல தூரத்தில் வழிப்பிள்ளையார் வேப்பமரத்தின் கீழ் இருப்பது தெரிந்தது. அருகில் செல்லும் போது “நந்தீஸ்வரர் கோயில்” என பெயர்பலகையும் இட்டு செல்லும் வழியும் அம்புக்குறியினால் போடப்பட்டிருந்தது.

அந்த இடத்திலிருந்து அம்புக்குறி காட்டிய வழியே செல்லும் போது 10 நிமிட சைக்கிள் பயணத்தூரத்தில் மலையை வந்தடைந்தோம்.
ஏறும் அளவுக்கு பெரிய மலை இல்லை எனினும் அங்கு நின்று பார்க்கும் போது கார்மலை, புறாக்குஞ்சு மலை, வெள்ளைக் கல்லு மலை, இரைச்சலாறு மலை, புளுட்டுமானோடை மலை, கொட்டடி மலை, கெவர்மலை (டோரா போரா), படிவெட்டின மலை, கித்துள் மலை, குருட்டு மலை, தலப்பாக்கட்டு மலை, கதிரமலை (கெமுனு புர) என மலைகள் எல்லாம் தெளிவாக தெரிந்தன. ஒரு சிறிய கோவிலும் கற்பாறை ஒன்றின் மேல் சிவலிங்கமும் வைக்கப்பட்டிருந்தது. அந்த சிவலிங்கம் இருந்த பக்கம் பார்க்கும் போது குடும்பி மலையும் கம்பீரமாக தெரிந்தது.
இதமான மூலிகை காற்று, அமைதியான சூழல், பேச்சு துணைக்கு நண்பன், விளையாட்டு காட்டும் குரங்கு கூட்டம் மற்றும் காதுக்கினிய முருகன் பாட்டு பசிவந்தால் அவித்த சுவையான கடலை இனி வேறென்ன இன்பம் வேண்டும். அனைத்தையும் உள்வாங்கியபடி சிவனையும் தரிசித்து அவனடியில் குட்டி தூக்கமும் போட்டுவிட்டு மீண்டும் பயணம் அடுத்த மலையை நோக்கி தொடர்ந்தது.
மேலதிக படங்களை காண இங்கே சொடுக்குக
#மட்டுநகர்_திவா
23/4/2022








