இன்றைய பயணக் குறிப்பாக இலங்கைத்துறை முகத்துவாரத்துக்கு போய் வந்த கதை தான் சொல்லப்போறன். இந்த இடத்தை கொஞ்சம் வரலாற்றோடும் தழுவினபடி பாப்பம்.
மட்டக்களப்புல இருந்து வாகரை வழியாக திருகோணமலைக்கு போற வீதியால போகக்குள்ள வெருகல் தாண்டியதும் இலங்கை துறை முகத்துவாரம் என்று சொல்லி ஒரு பெயர்பலகையும் அதுக்கு வழி காட்டுற போல அம்புக்குறியும் இருக்கும் அந்த வழியால 13.5km போற நேரம் மட்டக்களப்பில இருந்து 98km தூரத்துல தான் இந்த இலங்கை துறை முகத்துவாரம் வரும்.
இந்த இடத்துக்கு வந்ததுமே முதல்ல தெரியறது நல்ல அழகான பாலம் ஒன்று தான் இந்த பாலம் “உள்ளகளி” களப்பும் கடலும் ஒன்றாக கலக்கும் முகத்துவாரத்துக்கு மேலாக போகுது. வாகனத்துல வந்தா இந்தப்பாலத்தடியில இறங்கி நடந்து போனா கொஞ்சம் அனுபவம் கூட கிடைக்கும். இந்த பாலம் சண்டை நடந்த நேரத்துல உடைச்சி வெச்சிருந்தாங்களாம். சண்டை முடிந்த பிறகு புதுசா ஒரு பாலம் போட்டிருக்காங்க.

முகத்துவாரத்தின் அழகையும் அங்க இருக்கிற பறவைகளையும் இரசிச்சிக்கொண்டே பாலத்தை கடக்கிற நேரம் கொஞ்சம் மேல அண்ணார்ந்து பார்க்கும்போதே “லங்காப்பட்டுண சமுத்திரகிரி விகாரை” தெரியும்.
அப்பிடியே பாலம் முடியிற தூரம் வரை நடந்த பிறகு பின்னால திரும்பி பாத்தா பத்தினி அம்மன் கோவில் தெரியும், அதுலயே நிண்டு கடலை பாத்தா தூரத்துல படகு வடிவிலான கல் ஓன்றும் தெரியும்.

இந்த மூன்று இடங்களுக்கும் எழுதப்பட்ட, எழுதப்படாத அல்லது மறைக்கப்பட்ட சில வாய்வழிக் கதைகளும் இலங்கை துறைமுக வாழ் தமிழ் மற்றும் சிங்கள மக்களிடம் உலாவிக்கொண்டிருக்கிறது.
முதலாவதாக சிங்கள மக்களின் கதையை கொஞ்சம் மேலோட்டமாக பாப்பம். புத்தர் பரிநிர்வாணம் (சமாதி) அடைந்த பிறகு அவரது உடல் எச்சங்கள் பல இடங்களில் வணக்கத்துக்குரிய பொருளாக மாற்றப்பட்டது.

அதிலும் 4 கோரைப்பற்கள் வணக்கத்துக்குரிய பொருட்களில் மிகவும் பொருளாக பார்க்கப்பட்டதுடன் சக்ராவின் (தெய்வங்களுக்குகெல்லாம் தெய்வம்) இடத்தில் , காந்தாரர்களிடம், நாகர்களிடம் மற்றும் கலிங்கம் போன்ற இடங்களில் வைத்து வணங்கப்பட்டது.
இந்த நிலையில் கலிங்கத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக புனிதப்பல் நினைவுச்சின்னத்தை கடைசியாக வைத்திருந்த மன்னன் கலிங்கத்தின் குஹாசிவா (கி.பி. 4 ஆம் நூற்றாண்டு).

இந்த குஹாசிவாவின் மகளான ஹேமமாலாவாலும் அவளது கணவன் தந்தகுமாரனாலும் (Danta and Hemamala) அந்த நேரத்தில் பௌத்தம் ஆழமாக பரவியிருந்த இலங்கைக்கு பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்டது.
அவர்கள் புனிதப்பல் சின்னத்தோடு வந்து இறங்கிய இடம் தான் இந்த இலங்கைத் துறைமுகம்.


இங்கே அவர்கள் சந்நியாசி வேடம் தரித்து தான் வந்திறங்கினார்களாம் அவர்களது சிற்பம் தற்போது இயற்கையான ஒரு பாறை மீது செதுக்கப்பட்டுள்ளது.
ததவம்ச, தலதசிரிதா மற்றும் மகாவம்சம் போன்ற இலக்கியப் படைப்புகள், தம்பதியினர் இலங்கைக்குச் செல்லும் வழியில் நினைவுச்சின்னத்தைப் பாதுகாப்பதற்காக எடுத்த முயற்சி மற்றும் எப்படி கொண்டு வந்து சேர்த்தார்கள் என்பதை பதிவு செய்கின்றன.

அவர்கள் வந்திறங்கிய இடத்தில் விகாரை அமைத்ததாகவும் அந்த விகாரை யுத்த காலத்தில் அழிக்கப்பட்டதாகவும் பின்னர் அந்த மலையில் விடுதலை புலிகளால் கோவில் அமைக்கப்பட்டதாகவும்
அதன் பிறகு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் கோவில் அழிக்கப்பட்டு இலங்கை இராணுவ பாதுகாப்புடன் தற்போது இருக்கும் சமுத்திரகிரி விகாரை அமைக்கப்பட்டதாகவும் சிங்கள வரலாறுகள் கூறுகிறது.

தமிழ் வரலாறுகள் பெரும்பாலும் வாய்மொழிக்கதைகளாகவே இருக்கின்றன. வாய்மொழியில் வரும் கதைகள் என்பதால் சில மிகைப்படுத்தல்களுடனும் வந்திருக்கலாம்.
எனினும் சில விடயங்கள் இப்போது இருக்கும் தடயங்களுடன் ஒத்துபோவதால் அவற்றை மட்டும் இங்கே குறிப்பிடலாமென நினைக்கின்றேன்.
“குஞ்சுமப்ப பெரியசாமி கோவில்” அழிக்கப்பட்டு தற்போது பிரபல சுற்றுலாத்தலமாக காணப்படும் “சமுத்திரகிரி விகாரை” அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மலையின் உச்சியில் தற்போதும் பிள்ளையார், முருகன் போன்ற தமிழ் கடவுள்களின் தடயங்களை பார்க்கக்கூடியதாக இருக்கிறது.

யார் இந்த பெரியசாமி ? நாட்டார் தெய்வமா? எமது பிரதேசத்தில் பெரிய தம்பிரான் மட்டும் தானே நாட்டார் தெய்வமாக இருக்கிறார்! இவரை மட்டும் ஏன் பெரியசாமி என்று சொல்கிறார்கள் ?? சாமிக்கெல்லாம் சாமி எம் பெருமான் சிவனாக இருக்குமோ எனும் சந்தேகமெல்லாம் கண் முன்னே வந்து போகுது.
பெரியசாமிக்கு கொடுக்கும் உருவம் எது எனவும் கண்டறிய முடியவில்லை. எனினும் தற்போது மக்கள் பெரியசாமியை கொடிமர வடிவில் வழிபடுகிறார்கள்.

கடல் தொழில் செய்வோரின் முதல் வணக்கத்துக்குரிய தெய்வமாகவும் பெரியசாமி இருக்கிறார்.
கடலில் கரையில் இருந்து சற்று தொலைவில் கப்பல் போன்றதொரு கல்லினையும் காணக்கூடியதாக இருக்கும் என தொடக்கத்தில் கூறியிருந்தேன்.
அதனையும் மக்கள் பெரியசாமியின் வணக்கத்தோடு தொடர்புபட்டதாக தான் பார்க்கிறார்கள். பெரியசாமி வந்திறங்கிய கப்பல் தான் கல்லாகி போனது எனவும் உள்ளூர் மக்கள் கூறினார்.
முற்றும் முழுதாக பெரியசாமி என்பவர் கப்பல் தெய்வமாகவோ அல்லது மீனவ தெய்வமாகவோ இருந்திருக்கலாம் என உணர முடிகிறது. கொடிமரமானது கப்பலில் இருக்கும் பாய்மரமாக கூட இருந்திருக்கலாம்.

அருகில் இருக்கும் பத்தினி அம்மன் கோவில் வாசலிலே பெரியசாமி உயரமான கம்பம் ஒன்றில் சில நிற துணிகளினை (தூரத்தில் இருந்து பார்க்கும் போது நிறம் சரியாக தெரியவில்லை) உயரத்தில் கட்டியவாறு மலையில் இருந்து இறங்கிய பின்னரும் கம்பீரமாக நிற்கிறார்.

மலையின் உச்சியில் இருந்து (புதிதாக அமைக்கப்பட்ட விகாரையிலிருந்து) கீழே கடல், பாலம், அந்த சுற்றுச்சூழல் என்பவற்றினை ஒரே பார்வையில் காணக்கூடியதாக இருக்கும்.
இந்த காட்சி தான் இந்த இடத்தின் பார்வைக் கூடம் (view point) என்று கூட சொல்லலாம்.
இந்த இடத்தில் இருக்கும் புத்தர் சிலையை சுற்றி சில்லறை காசுகளை எறியும் வழக்கமும் இருக்கிறது.

வயது முதிர்ந்தவர்கள் தொடக்கம் சிறியவர்கள் வரை எளிதாக வந்து செல்லக்கூடிய இயற்கை எழில் கொஞ்சும் பூமியாக இது உள்ளமையால் தற்போது அதிக சுற்றுலா பயணிகளை கவரத் தொடங்கியுள்ளது.
இந்த மலையில் இருந்து இறங்கி அண்ணளவாக 50 மீட்டர் தூரம் செல்லும்போது சிறிய மைதானம் ஒன்று தென்படும் அந்த மைதானத்தை ஒட்டியவாறு அழகிய கற்பாறைகள் நிறைந்த கடற்கரையும் காணப்படுகிறது.


இங்கே அதிக வகையிலான
- கொக்குகள்
- நாரைகள்
- நீர்க்காகம்
- மீன்கொத்தி
- சிவப்பு நிற நண்டுகள்
- பச்சைநிற நண்டுகள்
- கடல்வாழ் மிகச்சிறிய குருவி இனங்கள்
போன்றவற்றையும் காணக் கூடியதாக இருக்கும். பறவைகளை புகைப்படம் பிடிக்க சிறந்த இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

கௌவாட்டிகள் கற்களில் அதிக அளவில் ஒட்டியபடி காணப்படுவதால் கடலினுள் இறங்கி நடப்பது மிகவும் கடினமானதாக இருக்கிறது.

எனினும் அதிக அளவிலான தூரத்துக்கு கடல் மிகவும் ஆழம் குறைந்ததாகவே இருப்பதால் கற்பாறைகள் சற்றுக் குறைவான இடங்களில் நீராட உகந்ததாக இருக்கும்.

கடற்கரை ஓரத்தில் சமைத்து சாப்பிடும் வசதியும் இருக்கிறது. விறகும் தாராளமாகக் கிடைக்கிறது. அரை நாள் பயணத்துக்கு ஏற்ற இடமாக இதனைக் குறிப்பிட முடியும்.
மட்டக்களப்பிலிருந்து பயணிப்பவர்களுக்கு நேர முகாமைத்துவம் திட்டம் ஒன்றினையும் இத்தோடு இணைக்கிறேன்.
மட்டக்களப்பிலிருந்து காலை 7 மணி அளவில் பயணத்தை தொடர்ந்தால்
1. வெருகல் முருகன் கோயில் ( 30 நிமிடம் செலவிடலாம்)
2. லங்கா பட்டுண சமுத்திரகிரி விகாரை (1 1/2 மணித்தியாலம்)
3. லங்கா பட்டுண கடல் குளியல் + சமையல் (2 1/2 மணித்தியாலம்)
4. சேருவில ரஜமகா விகாரை (1 1/2 மணித்தியாலம்)
என அன்றைய நாளை பின்னேரம் 5 மணியுடன் இனிதாக நிறைவு செய்யக் கூடியதாக இருக்கும்.

குறிப்பு – லங்கா பட்டுணவிலிருந்து சேருவில ரஜமகா விகாரைக்கு செல்வதற்கு கூகுள் மேப் காட்டும் குறுக்கு பாதையை பயன்படுத்த வேண்டாம்.மோட்டார் சைக்கிள் தவிர்ந்த வேறு வாகனங்கள் அந்தப் பாதையால் பயணிப்பது மிகவும் கடினமானது.
வந்த வழியால் முண்டம் மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான பாதைக்கு வந்து பின்னர் சேருவில விகாரையை நோக்கி செல்லவும்.
#மட்டுநகர்_திவா












Congratulations 🎊🎉
Very useful information
Thank you very much Thiva
Thank You brother
பெளத்தர்கள் சொல்லுகின்ற கதை ஒரு கட்டமைக்கப் பட்டதுதான் யுத்தகாலத்துக்கு முன்னரான நாட்களில் இங்கு பெளத்தர்கள் வரவே இல்லை இது ஒரு புனைவுக் கதை அந்த நாட்களில் இந்த இடங்கள் நம்மவர்களால் குவாட்டி எடுப்பதற்கும் பெரிய நண்டுகள் பிடி படும் இடமாக அறியப் பட்டிருந்தது. இலங்கைத்துறை முகத்துவாரம் இலந்தத்துறை முகத்துவாரம் என அறியப் பட்ட இடம் எல்லாளன் வந்து இறங்கிய இடம் என சில செய்திகள் தெரிவிக்கின்றன.ஈழத்துறை பின்னர் இலந்தத் துறையாக மாறியிருக்கலாம்