மட்டக்களப்பில் குடியேற்றங்கள் ஏற்பட முன்னர் சில சாதியினர் வாழ்ந்தனர் என்பதற்கு மட்டக்களப்பின் தெய்வ வழிபாட்டு முறைகளும் கர்ண பரம்பரை கதைகளும் சான்றுபகிர்கின்றன.
மட்டக்களப்பு வரலாற்று நூல்களில்
1. வேடர்
2. புலிந்தர் – புலியர்
3. இயக்கர்
4. நாகர்
5. திமிலர்
6. கழுவந்தர்
7. முக்கியர்
ஆகிய குலக்குழுக்களை அல்லது சாதிகளை மட்டக்களப்பின் பூர்வீக குடிகளாக குறிப்பிட்டுள்ளனர். வேடர்கள் இயக்கர்களுடன் தொடர்புபடுத்தியும் இயக்கர்களை திமிலர்களுடன் தொடர்புபடுத்தியும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இவர்கள் தமக்கென சில தெய்வங்களையும் வணக்க முறைகளையும் கொண்டிருந்திருக்க வேண்டும் என்பதை இன்றும் மட்டக்களப்பில் காணப்படும் வேடர், வேட வேளாளர் எனப்படும் புராதன சாதியினரிடையே காணப்படும் தெய்வங்களையும் வணக்க முறைகளையும் கொண்டு அறிய முடிகிறது. •ம.ம.நா (பக்.100)
குமாரர், உத்தியாக்கன், தெவுத்தன் என்பவை புராதன மட்டக்களப்பின் பழங்குடிகள் வணங்கிய தெய்வங்களாகும்.
உத்தியாக்கன் என்பது அவர்களது குழுவிலே வாழ்ந்து இறந்த முன்னோர்களை வழிபடும் முறையாகும்.
மாறா என்பது வேட்டையாடும் அல்லது வேட்டைக்கு உதவும் தெய்வமாகும். மாறாக்கள் தேவைகளை பொறுத்து பலவகைகளாக பிரிக்கப்பட்டிருந்தன.
1. பணிக்கன் – யானை கட்டும் தெய்வம்.
2. வதனமாறா – மாடு கட்டும், வேட்டையாடுதலையும் செய்யும் தெய்வம்.
3. பணிக்கமாறா – யானை கட்டும், வேட்டையாடுதலையும் செய்யும் தெய்வம்.
குமாரர் வேடர்களின் குலதெய்வமாகவும் பூர்வீக குடிகளின் பிரதான தெய்வமாகவும் இருந்தது. குமாரர் வழிபாடு பற்றி பின்னர் விரிவாக ஆராய்வோம்.
பெண் தெய்வங்களாக
1.செம்ப நாச்சி
2. தெய்ய நாச்சி
3. புள்ளி நாச்சி
4. வோமள் நாச்சி
5. நாமள் நாச்சி
6. பெய்ய நாச்சி
7. கட நாச்சி
8. மருமுந்த நாச்சி
போன்றவை காணப்பட்டன கடல், மழையுடன் தொடர்பு பட்ட தெய்வங்களாக கொள்ளப்படுகிறது.
காட்டுத்தெய்வம் என்ற ஒன்றினை காட்டை பரிபாலிப்பதற்காக வைத்து வணங்கினர்.
தெவுத்தன் தெய்வங்கள் என்பன ஆண் தெய்வங்களாகும்.
1. குருணாகல் தெவுத்தன்
2. மாத்தளை தெவுத்தன்
3. கடவத்த தெவுத்தன்
4. அல்லன தெவுத்தன்
5. பணங்காவில் தெவுத்தன்
6. புள்ளிக்கார தெவுத்தன்
7. மேச்சுக்குத்துற தெவுத்தன்
தெவுத்தன்கள் ஒவ்வொரு பிரதேசத்திலும் வாழ்ந்து இறந்து போன பிரதேச தலைவர்களாக இருக்கலாம் என்று பேராசிரியர் சி. மெளனகுரு குறிப்பிடுகிறார்.
உசாத்துணை
ம.ம.நா – மட்டக்களப்பு மரபு வழி நாடகங்கள்
ம.த – மட்டக்களப்பு தமிழகம்
(தொடரும்)
– மட்டுநகர் திவா



