ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு தெய்வங்கள் உண்டு. அவை நோய் தரும் தெய்வங்களாக வகைப்படுத்தப்படுகிறது.
1. மாநீலியா
2. மறமுந்த
3. குருவிலிமுந்த
4. எரிகணுமுந்த
5. முக்காட்டுத்தெய்வம்
6. இந்துமாள் நாச்சி
7. முத்துமாள் நாச்சி
8. மானிலியம்மன்
9. தெல்கிரியம்மன்
10. பத்தினி அம்மன்
11. ஆலாத்தித்தெய்வம்
12. பட்டாணி
13. புள்ளிக்காரன்
14. பொல்லுக்காரன்
போன்றவற்றை இவர்கள் வழிபடுகிறார்கள்.
கொட்டு எனும் இசைக்கருவி இங்கே பயன்படுத்தப்படுகிறது. இது தற்போது பயன்படுத்தப்படும் பறை போன்ற தாள ஓசையை உருவாகக் கூடியது.
தாளத்துக்கேற்ப தெய்வங்கள் ஒருவரில் வந்திறங்கி ஆடும்.
இவற்றில் பிரதான தெய்வம் குமாரர் ஆகும்.
இத்தெய்வங்களுக்கென பிரத்தியேகமான வணக்கமுறைகள் காணப்படுகின்ற போதும் இவற்றுக்கென தனிப்பட்ட கோவில்கள் கிடையாது. காட்டின் அல்லது கிராமத்தின் நடுவே உள்ள மரம் அல்லது குறிக்கப்பட்ட நடுகல் ஒன்றே கோவிலுக்கான நிலையமாகும்.
ஆண்டுக்கொருமுறை அவ்விடத்தில் பந்தலிட்டு இலை, குளை, தெண்ணொலை, காட்டுப்பூக்கள் போன்றவற்றால் குறிக்கப்பட்ட இடத்தை(பந்தலை) அலங்காரம் செய்து இத் தெய்வங்களுக்குரிய விசேட பூசைகளை செய்வர். இச்சமயம் அந்தந்த தெய்வங்களும் தொடர்புடைய பல நிகழ்ச்சிகளும் நிகழ்த்தப்படும்.
கொட்டு ஓசைக்கு ஏற்ப சன்னதம் கொண்டோர் ஆடும் ஆடலும், அது சம்பந்தமான சடங்கு முறைகளுமே இத் தெய்வங்களுக்கான வணக்க முறைகளாகும்.
இறந்த முன்னோரை வணங்கும் வழக்கம்(உத்தியாக்கள்) இவர்களிடம் இருப்பதும் இவர்களின் புராதனத்தன்மைக்கு உதாரணமாக உள்ளது.
இன்று ஆடி அமாவாசை தினத்தன்று பிராமணரை கொண்டு பிதிர்க்கடன் செய்வதை இந்துக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் உத்தியாக்கள் முறை பிராமண முறை சாராத ஒரு வகை பிதிர்க்கடன் முறையாகும்.
இறந்தவர்களை இப்போது உயிருடன் இருப்பவர்களின் உடலில் வரப்பண்ணி இறந்த மூதாதையருடன் உறவாடும் முறை எனவும் சொல்லலாம்.
இத்தெய்வங்களும் வணக்க முறைகளும் மட்டக்களப்பின் பூர்வீக குடிகள் வணங்கிய வணக்க முறைகளாக இருக்க வேண்டும்.
(தொடரும்)
– மட்டுநகர் திவா



