மட்டக்களப்பின் பூர்வீக வழிபாட்டு தெய்வங்கள் பற்றிய ஆய்வுச்சுருக்கம் – பகுதி 4

மட்டுநகர் திவா
மட்டுநகர் திவா
3 Min Read

அம்மன், பத்தினித் தெய்வம் ஆகியவை பின்னால் வந்து சேர்த்த புராதன குடிகள் மத்தியில் பரவிய தெய்வங்களாக இருக்கலாம்.
பிற்காலத்தில் வெளிநாட்டார் குடியேற்றத்தினாலும், கலாச்சாரத்தினாலும், குமார தெய்வ கோவில்கள் சுப்பிரமணியருடன் இணைக்கப்பட்டு பெருந்தெய்வக் கோயிலாக இருக்கலாம்.
இதன் பின்னரே சிவன் விஷ்ணு போன்ற வீராகம முறையில் பூசை புரியும் பெருங்கோவில்கள் எழுந்திருக்க வேண்டும்.
இப்போது மட்டக்களப்பில் பெரு வழக்கில் உள்ள கிராமிய தெய்வங்கள் பின்னால் வந்து மட்டக்களப்பு பகுதியில் குடியேறிய மக்கள் கொண்டுவந்த தெய்வங்களாக இருக்கலாம். இவற்றுக்கான வணக்க முறைகளும் அவற்றுடன் சேர்ந்தவாறே வந்திருக்க வேண்டும்.
1. கண்ணகி அம்மன்
2. மாரியம்மன்
3. கங்கை அம்மன்
4. காளி
5. பட பத்திரகாளி
6. வட பத்திரகாளி
7. மாநீலி
8. குடா நீலி
9. இந்துமா நாச்சி
10. கட நாச்சி
11. பேச்சியம்மன்
12. வீர பத்தினி
13. அகிலேச கன்னி
போன்ற பெண் தெய்வங்களும்

1. வைரவர்
2. ஐயனார்
3. விறும வைரவர்
4. வீரபத்திரன்
5. காத்தான்
6. பெரியதம்பிரான்
7. நீலாசோதயன்
8. நரசிங்க வைரவர்
9. சிங்கநாத வைரவர்
10. திரிசூல வைரவர்
11. நாக தம்பிரான்
12. கிரக சாந்தி
13. அனுமார்
போன்ற ஆண் தெய்வங்களையும் குறிப்பிடலாம்.

இவைகளில் பல தென்னிந்தியாவில் கிராமிய தெய்வங்களாக இருப்பதனால் இவை தென்னிந்தியாவில் இருந்து இங்கு வந்து சேர்ந்த தெய்வங்களாக எடுகோள் எடுக்கலாம்.

இவற்றின் வணக்க முறைகள் முன்னர் சொன்ன குமார தெய்வ வணக்க முறையுடன் ஒப்பிடுகையில் மாறுபட்டதாகவே உள்ளது. இத்தகைய ஒரு வேறுபாடு இது நமது மட்டக்களப்பின் பூர்விக தெய்வங்கள் இல்லை என்பதை சான்று பகிர்கின்றன.

இப்ப தங்களுக்கென தனிப்பட்ட சிறு கோயில்கள் உண்டு. இன்றைய காலகட்டத்தில் நாம் இதனை கண்ணாரக் காண்பதை ஆதாரமாகக் கொள்ளலாம். அத்தோடு தெய்வம் ஆடுபவர்கள் தம் இஷ்டப்படி கொட்டுக்கு ஆடும் வழக்கம் இக்கோயில்களில் இல்லை. கோயில்களுக்கு என பிரத்தியேகமாக நியமிக்கப்பட்ட பூசாரி ஒருவர் இருப்பார்.
அவர் தலைமை பூசாரி என அழைக்கப்படுவார். அவருக்கு உதவிக்கு இன்னும் இரு பூசாரிகள் பொதுவாக கோயில்களில் இருப்பார்கள். ஆனால் உதவிக்கு பூசாரிகள் இருக்க வேண்டும் என்பது கோயில்களில் கட்டாயமில்லை.

பூசாரியின் மந்திர உச்சாடணத்திற்கு ஏற்ப அவர் அழைக்கும் ஒரு தெய்வம் குறிப்பிட்ட தெய்வம் ஆடுபவரில் வெளிப்படும்.தெய்வம் பிடித்தவர் தெய்வமேறி ஆடுவார். உடுக்கு ஒலிக்கு ஏற்ப அவர் அசைந்து அசைந்து ஆடுவார். அவரின் ஆடல்களுக்கு தக்கதாக பூசாரி பாடல்களைப் பாடுவார். தாலாட்டு, கும்மி என சில வகையான பாடல்கள் மட்டக்களப்பில் சிறு தெய்வ வணக்கப் பாடல்களாக உள்ளன.

தெய்வங்களை வசியம் பண்ணுதல், தெய்வம் ஆடுவதற்கு மேலும் உருவேற்றுதல், அட்சரம் கீறுதல், அட்சரங்களை கீறி தம்பனம் செய்தல், கட்டுதல் வெட்டுதல் போன்றவைகளும் இக் கிரியை முறைகளில் அடங்கும்.

வயல்கள் வைத்திருப்பவர்கள் காவல் செய்ய வைரவரை வழிபடுகின்றனர். ஆண்டுக்கொரு முறை கதவு திறந்து இக் கோயில்களில் பூசை நடத்தப்படும். கண்ணகி கோயில்கள் வைகாசி மாதத்தில் நடைபெறும். காளி, மாரி கோயில்கள் ஆனி ஆடி மாதங்களில் நடைபெறும். இவை உக்கிரமான கோடை கால பகுதிகளாக இருக்கும்.

நாடு குளிரவும், பயிர்கள் செழிக்கவும், மழை வேண்டியும் குளிர்த்தி செய்கின்றனர். இவ் வணக்க முறைகளும், வேண்டுதல்களும் விவசாய பொருளாதார அமைப்பினை சார்ந்து நிற்பது புலப்படுகிறது. இதிலிருந்து நம்மால் ஒப்பீட்டளவில் ஓர் முடிவுக்கு வரக்கூடியதாக இருக்கும். எப்படி என்றால் இவ் வணக்க முறைகள் தோன்றுவதற்கு சற்று முன்னரான காலத்தில் விவசாயத்துக்காக முன்னோர்கள் பூஜை செய்யவில்லை. மாறாக விலங்குகளை மெய்ப்பதற்காகவும் (காவல்), தமக்கு நோய் நொடிகள் வராமல் இருக்கவுமே தெய்வங்களை வணங்கினர். தற்போது அவற்றுடன் சேர்த்து விவசாயப் பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்கிலும் தெய்வங்களை வழிபடத் தொடங்குகிறான்.

(தொடரும்..)

#மட்டுநகர்_திவா

Share this Article
Leave a comment