படர்கல் மலை / பகுதி 2

மட்டுநகர் திவா
4 Min Read

படர்கல் மலைக்கு செல்லும் பயணக்குறிப்பு

தொடர்ச்சி….

தொடர்ந்து பயணித்தால் வீதி ஓரமாக பாதி வற்றிய நிலையில் நவுண்டிலியாமடு குளம் காணப்பட்டது.

நன்னீர் மீன்பிடி மற்றும் விவசாயத்துக்கு பிரதான நீர் முதலாக இது இந்த பகுதியில் காணப்பட்டது. இந்தக் குளக் கட்டில் மோட்டார் சைக்கிளை ஏற்றி புகைப்படங்களும் எடுத்து

 5 நிமிடம் இளைப்பாறிவிட்டு புளுட்டுமானோடை மலையை நோக்கி நீளும் சாலையில் பயணம் தொடர்ந்தது. 

தூரம் செல்லச் செல்ல ஆள் நடமாட்டம் குறையத் தொடங்கியது. சுற்றிவர எமது மோட்டார் சைக்கிள் சத்தத்தைத் தவிர சில்லூறு மற்றும் தேவாங்குகளின் இரைச்சல் மட்டுமே இருந்தது.

இதிலிருந்து அடர்ந்த வனம் தொடங்கியது காவல் தெய்வமாக குமாரர் வேல் மற்றும் அரிவாளுடன் புளுட்டுமானோடை மலை அடிவாரத்தில் இருக்கிறார். 

மலையடிவாரத்தில் வாடி வைத்திருப்பவர்களும் காட்டுக்கு விறகு வெட்டவோ கடுபுளியம்பழம் ஆய செல்பவர்கள் என அனைவரும் பயபக்தியாக வணங்கிச் செல்லும் தெய்வம் இது.

நாமும் வணங்கியபடியே இந்த இடத்தை கடந்து சென்றோம்.

மரங்கள் வழியில் முறிக்கப்பட்டு கிடந்தன. ஆள் நடமாட்டம் ஒன்று கூட இல்லை. மயான அமைதி நிலவ தொடங்கியதும் நாமும் கதைத்துக் கொள்ளவில்லை சுற்றியுள்ள இடங்களில் இருந்து எதுவும் சத்தங்கள் வருகிறதா என அவதானித்துக் கொண்டே புளுட்டுமானோடை குளத்தை வந்தடைந்தோம்.

புளுட்டுமானோடை குளத்துடன் மாவடியோடை தொடக்கம் நாம் வந்த பாதை முடிவடைகிறது. இனி பாதை எனும் பெயரில் ஒன்றும் இல்லை கால் போன போக்கில் போக வேண்டிய திசையை நோக்கி செல்ல வேண்டியது தான்.

புளுட்டுமானோடை குளம் மிகவும் அழகானது. ஒரு எருமை மாட்டுப்பட்டி குலத்தருகே மேய்ந்து கொண்டிருந்தது.

குளத்தருகே இருந்து புளுட்டுமானோடை மலையை காணும் காட்சி பிரமிக்கத்தக்கதாக இருந்தது.. எவ்வளவு பெரிய மலை! குளத்தடியில் இருந்து சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

இங்கிருந்தே மண் மலையையும் கெவர் மலையின் உச்சியையும் ( டோரா போரா) காணக்கூடியதாக இருக்கும்.

புளுட்டுமானோடை மலையும் குளமும்

குளம் வற்றி இருந்தமையினால் குளத்தின் நடுவே ஒற்றையடிப்பாதை மேற்கு நோக்கிச் செல்கிறது. அந்தப் பாதையால் தொடர்ந்து பயணம் செய்து அண்ணளவாக 15 தொடக்கம் 20 நிமிடங்களில் எமது இலக்கான படர் மலை அடிவாரத்தை வந்தடைந்தோம்.

வரும் வழியில் இரு சிற்றாறுகள் குறுக்கறுத்தன எனினும் அவற்றில் நீரோட்டம் அதிகமாக இல்லாமையால் தொடர்ந்தும் மோட்டார் சைக்கிளிலேயே நம்மால் பயணம் செய்து அடிவாரம் வரை வர முடிந்தது.

இலுப்படிச்சேனை சந்தியில் வாங்கிக் கொண்டு வந்த பயத்தம் உருண்டைகளை சாப்பிட்டு நீரையும் குடித்துவிட்டு மோட்டார் சைக்கிளையும் பாதுகாப்பாக வைத்துவிட்டு. அடிவாரத்தில் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு மலை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

இவ்வளவு நாளும் போய் திரிந்த காடுகளை விட இது சற்று அடர்த்தியாகவும் பரந்து விரிந்து அருகில் இருப்பவர்களைக் கூட இலகுவில் கண்டுபிடிக்க இயலாத அளவு வளைந்து நெளிந்து செல்லும் ஒற்றையடிப் பாதைகளை கொண்டதாகவும் காணப்பட்டது.

முன்னர் போன இடங்களில் 4 மணிக்கு முதல் யானை வராது பயமில்லாமல் காட்டு வழியே போய் வரலாம் என ஊர் மக்கள் சொல்வார்கள். ஆனால் இந்தக் காடுகள் அப்படியல்ல யானை முழு நேரமும் சுற்றிக்கொண்டிருக்கும் சூரிய வெளிச்சம் அரிதாக மண்ணில் படும் அடர்ந்த காடுகள்.

யானைக்கு மேலதிகமாக பயங்கரமான ஆளைக் கொல்லும் சிறுத்தைகளும் இந்த இடத்தில் நடமாடித் இருக்கின்றன.

சற்று தூரம் உள்ளே சென்றதும் ஒற்றையடிப்பாதை இல்லாமல் போய்விட்டது. இனி மலை இருக்கும் திசையை தெரிந்தவர்களால் மட்டும்தான் போகக் கூடியதாக இருக்கும். வழிமாறிச் சென்றால் திரும்பி அடிவாரத்திற்கு வரவும் முடியாமல் போய்விடும்.

நம்முடைய குழுவில் இருந்த வடிவேல் ஐயாவுக்கு கடுபுளியம்பழம் ஆய அடிக்கடி வருவதால் இந்த இடங்களும் வழிகளும் பழகிப் போயிருந்தது. காலில் செருப்பு கூட போட மாட்டார்.

ஒரு தண்ணீர் போத்தலை கமக்கட்டில் சொருகிக்கொண்டு சேட் பொக்கேற்றில் ஒரு கட்டு வீடியும் நெருப்பெட்டியும் சிறிய தொலைபேசியும் வைத்துக் கொண்டு சாரணை மடித்துக் கட்டிய படி மிக வேகமாக நடக்கத் தொடங்கி விடுவார்.

எம் ஒருவரிடமும் பசிக்கு எந்த ஒரு சாப்பாடும் கையில் இல்லை. சற்று நேரத்தில் திரும்பி விடலாம் என்ற நம்பிக்கையில் வந்துவிட்டோம் ஆனால் நேர தாமதமாகும் போல் தெரிகிறது சரி நடப்பது நடக்கட்டும் வந்த வேலை முடியாமல் திரும்புவது சாத்தியமற்றது.

கதைத்துக் கொண்டே செல்லும் வழியில் பெரிய மலை போன்ற ஒரு பாழடைந்த செங்கற்களால் ஆன தூபி ஒன்று தெரிந்தது.

போகும் வழி தான் என்பதால் தூபியையும் சற்று சுற்றிவளைத்து பார்த்து விட்டுச் செல்வோம் என முடிவெடுத்து அருகே சென்றபோது காத்திருந்தது மிகப் பெரிய அதிர்ச்சி. அந்தத் தூபியானது புதையல் போட்டி காரர்களால் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டிருந்தது.

தூபியின் நடுவே மிகப்பெரிய துளையிட்டு அதன் அடியில் இருந்து எதையோ எடுத்துச் சென்றிருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிந்தது. தூபியின் அருகே ஒரு செவ்வக வடிவான பீடக்கல் ஒன்றும் இருந்தது.

அழிக்கப்பட்ட தூபி
பீடக்கல்

நேரம் நண்பகல் 12.30 ஐ தாண்டி போய்க்கொண்டிருந்தது. அப்போதும் சூரிய வெளிச்சம் அவ்வளவாக காட்டுக்குள் ஊடுருவ முடியாமல் பின்னேரம் 5 மணி போலக் காட்சியளித்தது.

தொடர்ந்து அண்ணளவாக அரை மணி நேர பயணத்தின் பின்னர் எமது இலக்கான படர்கல் மலையை வந்தடைந்தோம்.

வரும் வழியிலேயே மலையின் பிரம்மாண்டத்தோடு தூரத்திலேயே சில கற்புருவ வெட்டுக்களும் தெரிந்தன. அப்போது கல்வெட்டுகள் எதையாவது இன்று பார்த்துவிடலாம் என்று மனதில் நம்பிக்கை வந்தது.

நுழைவாயிலை நெருங்கியதும் பெரிய மரம் ஒன்று சரிந்து கிடந்தது அதில் மழைக்காடுகளில் இருப்பது போல் பாசியும் வளர்ந்திருந்தது.

பகுதி 3 தொடரும்…

-மட்டுநகர்_திவா

Share this Article
Leave a comment