படர்கல் மலைக்கு செல்லும் பயணக்குறிப்பு
தொடர்ச்சி….
நுழைவாயிலில் படிகள் அமைக்கப்பட்டு இருந்தது அவை தற்போது சிதைவடைந்து காணப்பட்டதாலும் மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருந்தாலும் சற்று அவதானமாகவே நடக்க வேண்டியிருந்தது.
மரங்களின் கிளைகள் பின்னால் வருபவர்களது முகத்தில் அடிக்கும் என்பதால் சற்று இடைவெளி விட்டே நடந்து வந்து கொண்டிருந்தோம்.
முதலாவதாக ஒரு பெரிய குகை எம்மை வரவேற்றது. அண்ணளவாக 20 தொடக்கம் 30 பேர் தங்கக் கூடிய குகை. அதில் சிறப்பான முறையில் கற்புருவம் வெட்டப்பட்டிருந்தது.
குகையினுள் மழை நீரானது வடியாமலும், கல்வெட்டுகளுக்கு நீரால் பாதிப்பு (பாசி பிடித்தல், நீரால் அரிப்படைதல்) ஏற்படாமலும் இருக்கவே கற்புருவமானது வெட்டப்படுகிறது. கற்புருவத்தின் கீழ் பிராமிக் கல்வெட்டு ஒன்றும் இருந்து.
இதில் “இந்தக் குகை மகாதீச மன்னனின் மகனால் பெளத்த சங்கத்தினருக்கு வழங்கப்பட்ட தானம்” என எழுதப்பட்டிருந்தது.

நாக வழிபாடும் சிவ வழிபாடும் காணப்பட்ட காலத்தில் பெளத்தம் தலைதூக்கத் தொடங்கியது. தமிழர்களும் புத்த மதத்தை தழுவிக் கொண்டனர். தமிழ் பௌத்தம் உருவாக்கப்பட்ட அல்லது வளர்ச்சி அடையத் தொடங்கிய காலகட்டம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.
தொடர்ந்து நடக்கையில் அருகே அதைவிட சற்று சிறிய உயரமான குகை ஒன்று கண்ணில் பட்டது அதிலும் இதேபோன்று சிறப்பாக செதுக்கப்பட்ட கற்புருவங்களும் பிராமிக் கல்வெட்டுகளும் காணப்பட்டது.
இந்த நுழைவாயில் ஒரு கோட்டை வாசலை போல் இருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

சிறப்பாக வெட்டப்பட்ட படிகளும் வானுயர்ந்த மலைகளுடனுமாக கோட்டையானது மிகவும் கம்பீரமாக காணப்பட்டதால் இதனுள் செல்லும்போதே ஒரு பயங்கலந்த ஒரு சந்தோஷத்தை மனதினுள் அனுபவிக்க கூடியதாகவும் இருக்கும்.
அனைவரும் அறிந்த சிகிரியா மலையில் குகைகளில் இருந்து மேலே பார்க்கும் போது எவ்வளவு பிரமிப்புகள் இருக்குமோ அதேபோல இந்த குகையை கடந்து அடுத்த பகுதிக்கு அந்த படிக்கட்டினால் நாம் நடந்து செல்லும் போது உணர முடிந்தது.
அந்தப்படிகளில் இடைக்கிடையே சில நேர்த்தியான முறையில் இருந்த குழிக்கல் பொருத்துக்களையும் அவதானிக்க முடிந்தது.
ஐந்து நிமிட பயணத்தில் பின் மீண்டும் ஒரு மிகப்பெரிய குகையை அடைந்தோம் அங்கே 47 அடி நீளமான சயன நிலை புத்தர் சிலை ஒன்று உடைக்கப்பட்டு கிடப்பதை பார்க்க கூடியதாக இருந்தது.

இது ஒரு மிகப் பெரிய குகையாக இருந்ததோடு மனித நடமாட்டம் மிகக்குறைவென்பதாலும் காட்டு விலங்குகள் அவற்றின் இருப்பிடமாக மாற்றி விட்டன.
அந்த குகையின் அடியில் காணப்படும் மண்ணானது தூசு போல இருக்கும். காலினை எடுத்து ஒரு அடி வைத்தாலும் புதைமணல் போன்று 5-7 சென்டிமீட்டர் உள்ளே செல்லும், பின்பு உறுதியான நிலம் வந்துவிடும்.
இந்த நிலத்தில் தான் புலி உறங்குமாம். இந்த குகை தான் படர்கல் மலை காடுகளில் வாழும் கொடிய புலிகளின் இருப்பிடமாம் என காட்டுக்கு வெளியே வந்து சில நாட்களின் பின் அறியக்கூடியதாக இருந்தது. முன்னரே இந்த கதை தெரிந்திருந்தால் சிலவேளை இந்த குகை பக்கமும் வந்திருக்க மாட்டோம்.
புத்தர் சிலையின் பின்னால் பாரிய இருளாக இருந்தது அருகே சென்று டார்ச் வெளிச்சம் அடித்து பார்க்கும் போது அங்கே இருட்டு போல் பிரம்மையை உண்டாக்கிய ஆயிரக்கணக்கான வெளவால்கள் எம்மை நோக்கியும், அங்குமிங்கும் எழுந்தமானமாக பறக்கத் தொடங்கி அந்த இடத்தையே அமைதி குலையைச் செய்துவிட்டன.

சரி சற்று குகைக்கு வெளியே வருவோம் என நினைத்து வெளியே வந்து குகை விளிம்பை அண்ணார்ந்து பார்க்கையில் வியப்புக்கு மேலானதொரு வியப்பு இந்த குகையில் தான் இதுவரை பார்த்ததிலேயே மிக நீளமான பிராமி கல்வெட்டு நேர்த்தியான கற்புருவத்துடன் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது.
கமராவின் படப்பிடிப்பு எல்லைக்குள் அந்த கல்வெட்டினை அடக்க முடியவில்லை எனவே 4 படங்களாக அந்த கல்வெட்டினை பிரித்து புகைப்படம் எடுத்தோம் எனவே எவ்வளவு நீளமாக இருக்கும் என யூகித்து பாருங்கள்.
இந்தக் கல்வெட்டை ஆராயும் போது சுவஸ்திகா சின்னம் இருப்பதை அவதானித்ததாக வரலாற்று ஆய்வாளர் திருச்செல்வம் ஐயா குறிப்பிட்டிருந்தார். அதில் சுவஸ்திகா சின்னம் இருப்பின் இந்தக்குகை தமிழர்களுடையதா அல்லது பெளத்தர்களுடையதா என நான் சொல்ல தேவையில்லை.
அந்த கல்வெட்டு “சிற்றரசன் யுவராஜன் நாகனுடைய மகனின் மகனின் மகன் பெளத்த சங்கத்துக்கு தானம் பண்ணியது” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் மூலம் எமக்கு ஒன்று மட்டும் தெளிவாகிறது இந்தக் குகைகளை தமிழர்கள் மூன்று தலைமுறைகளாகவோ அதற்க்கு மேலதிகமாகவோ தம் வாழிடமாகவோ அல்லது கோட்டையாகவோ பயன்படுத்தியிருக்க வேண்டும்.

அதன் பின்னர் புத்த போதனைகளால் கவரப்பட்டு புனித பெளத்த மதத்தினை தழுவும் போது அந்த குகைகளை பெளத்த சங்கத்தினருக்கு தானமாக கொடுத்திருக்க வேண்டும்.
அந்த கொடையாளியின் பெயர் கூட குறிப்பிட விரும்பவில்லை போலும், அதனால் தான் ஏனோ தனது பாட்டனாரின் பெயரை பதிப்பித்தவனுக்கு தனது பெயரை பதிப்பிக்கும் எண்ணம் வரவில்லை.
பகுதி 4 தொடரும்…
-மட்டுநகர்_திவா










