படர்கல் மலை / பகுதி 4

மட்டுநகர் திவா
5 Min Read

படர்கல் மலைக்கு செல்லும் பயணக்குறிப்பு

தொடர்ச்சி….

வெளவால்களின் அட்டகாசம் சற்று அடங்கியதும் குகையின் உட்புறம் ஒரு ஆள் செல்லக்கூடிய துளை வழியாக சூரிய ஒளி குகையினுள் வருவதை பார்க்க கூடியதாக இருந்தது நாமும் அந்த துவாரத்தின் ஊடக இன்னும் ஒரு வழி போவதை அவதானித்து அருகே சென்றதும் அந்த துளையின் வாசலில் ஒரு பெரிய பாம்பு புற்று இருந்தது.

உள்ளே பாம்பு இருக்கிறதா என தெரியவில்லை எனினும் நாம் சென்ற முதலாவது முனிவரின் குகையினுள் வெண் நாகத்தின் செட்டையை பார்த்ததில் இருந்து பாம்பு இந்த இடத்தில் தான் இருக்கிறது என்பதை உணர்ந்து விட்டோம். அந்த பாம்பின் புற்றாக தான் இருக்கும் என்றொரு பயமும் இருந்தது எனினும் தொடர்ந்து அந்த துளை வழியாக மலையின் இன்னொரு பகுதிக்கு வந்தோம். 

இது மலைக்கு மேல் மரங்களால் சூழப்பட்ட பகுதி நடைபாதைகளோ படிகளோ இல்லை. பாறைகளில் இருந்து இன்னொரு பாறைக்கு பாய்வதும் மரம் கொடிகளை பிடித்து குரங்குகள் போல தாவுவதுமாக ஒவ்வொரு தடைகளையும் கடந்து இன்னொரு குகையை வந்தடைந்தோம். கடந்து வந்த பாதை எவ்வளவு கடினமாக இருந்தாலும் எமது குழுவினரின் ஒற்றுமை அனைத்து கஸ்டங்களிலும் கைகொடுத்தது.

சற்று நேரம் இளைப்பாறி விட்டு கையில் இருந்த நீரெல்லாம் குடித்து முடித்து விட்டு வந்து சேர்ந்திருக்கும் குகையை சுற்றி பார்க்க தொடங்கினோம். ஏற்கனவே பார்த்த குகை போல இதிலும் கற்புருவம் வெட்டப்பட்டிருந்தது. எனினும் கல்வெட்டுகள் ஒன்றும் இல்லை மிகவும் மறைவாகவும் மற்றவைகளை விடஅதிகமான இயற்கை பாதுகாப்பு அரங்களாலும் சூழப்பட்ட குகை. இத்தனையும் தமிழர்களின் கைவண்ணம் என நினைத்து பெருமிதப்பட்டுக் கொண்டு பயணம் மலை உச்சியை நோக்கி பாய்ச்சல்கள்,தாவல்கள் என சாகசப்பயணமாக மாறிக்கொண்டிருந்தது.

சற்று தூரம் சென்றதும் மலை சுனைகளில் இருந்து கீழ் நோக்கி ஓடி வரும் சிறிய நீர் வடிச்சல்கள் அழகிய ஆபத்துகளாக எமது வழியை மறித்து கொண்டிருந்தது. நீர் வடியும் இடங்களில் பாசிகள் அதிகமாக இருப்பதால் அதனூடாக மலை உச்சியில்  நடப்பது உயிராபத்தை உண்டாகலாம் என்பதால் அதன் அருகே காய்ந்த நிலையில் இருந்த சறுக்கு பாறைகள் வழியாக ஏற தொடங்கினோம்.

பெயருக்கு ஏற்றால் போல இரண்டு தடவைகள் என்னையும் கீழே சறுக்கி விட்டது. காயம் ஒன்றும் ஏற்படாது எனினும் மீண்டும் முதல் இருந்து சறுக்கு பாறை வழியாகவே மேலே ஏற வேண்டும். குடிப்பதற்கு நீரும் கையில் இல்லை முயற்சியை கைவிடாமல் செருப்பை கழட்டி பாதுகாப்பாக ஒரு இடத்தில் வைத்துவிட்டு சறுக்குப் பாறைகளை கடந்து மலை உச்சியை அடைந்தோம்.

உச்சி என நான் சொல்லுவது மலை முகட்டை அல்ல, மலை முகடு மிகவும் செங்குத்தானது. கயிறு கட்டி மிகவும் பாதுகாப்பு உபகரணங்களுடன் தான் ஏற வேண்டும். அத்தோடு மலைத்தேனீ  கூடுகளும் எண்ணற்ற அளவில் மேலே இருக்கின்றன. தேன் எடுக்கப்போகும் ஆட்கள் சொல்லுவார்கள் “மலைத்தேனி துரத்தத்த தொடங்கிச்செண்டா.. தண்ணிக்குள்ள பாஞ்சாலும் நீந்தி வந்து குத்தும் டா தம்பி ” இந்த வார்த்தைகளின் வலி நேரடியாக குத்து வாங்கியவர்களிடம் கேட்டவனுக்கு  எப்படி இருக்கும்! இதனாலேயே யாரும் அந்த தேனீ இருக்கும் பக்கம் கூட போக மாட்டம்.

காலம் எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கும். கற்றுக்கொள்ளும் சுவை அறிந்தவனுக்கு கணக்கின்றிக் கற்றுக்கொடுக்கும். ஒவ்வொரு பயணங்களும் கணக்கற்ற விடையங்களை அனுபவம் எனும் ஆசானின் மூலம் கற்றுக் கொடுத்து எழுத வைக்கிறது. மலைகளின் செங்குத்தான முகடுகளில்  இடையிடையே வெள்ளை கம்பளம் விரித்தது போல சில சில செவ்வக வடிவான தடயங்கள் இருந்தன. மனிதர்களால் உருவாக்க முடியாதவை இயற்கையாக தான் உருவாகியிருக்க வேண்டும். எனினும் சற்று நேரம் என்னவென யோசித்துக்கொண்டே சுற்றவர இருந்த இயற்கை எழிலை பார்த்துக் கொண்டு அடுத்த குகையை தேடி ஏறிக்கொண்டு இருந்தோம்.

மீண்டும் ஒரு சரிவான பாதை ஊடக சென்று நீர்ச்சுனை உருவாகும் இடத்தில் மறைவாக அமைக்கப்பட்டிருந்த குகையை அடைந்தோம். ராஜ வாழ்க்கை என இதை தான் சொல்லியிருப்பார்கள் போலும். அனைத்து வசதிகளும் அந்தக் காலத்தில் மேலே இருந்திருக்கும் என நினைக்கிறேன். 

அந்த மலையில் இருக்கும் போது இந்த நீர் பாறைகளை பிளந்துகொண்டு எங்கிருந்து வருகிறது என வியந்து பார்த்தபடியே குகையோரம் கற்புருவத்துடன் இருந்த கல்வெட்டுகளையும் படம் பிடித்துக்கொண்டு சூரியன் அஸ்தமிக்க தொடங்க முன்னர் மலையில் இருந்து கீழே இறங்கி கொண்டிருந்தது. நேரமோ இப்போது 2.30 ஐ தாண்டி போய்க்கொண்டு இருந்தது. 4 மணிக்கிடையில் காட்டுப்பகுதியை விட்டு வெளியேறி மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிக்கு சென்றால் தான் ஓரளவுக்கு யானை அபாயம் நீங்கும்.

செய்மதிப்புகைப்படங்களின் உதவியுடன் நாம் சென்ற இடத்தில் இருந்து வந்த நீரூற்றுக்கான நீர் முதல் மலை மேல் இருக்கும் மழை நீரை தேக்கி வைத்திருக்கும் குளம் போன்ற அமைப்பாக இருக்கலாம் என யூகிக்கிறேன். எனினும் உறுதியாகத் தெரியவில்லை. சில காலங்களின் பின்னர் இந்த இடமும் சிகிரியா போன்றதொரு பிரபல்யமான சுற்றுலாத்தளமாக மாற்றப்படும் என்பதில் ஐயமில்லை. 

போன வழியால் திரும்பாமல் வேறு ஒரு வழி மூலமாக திரும்பவும் நுழைவாயிலை வந்தடைந்தோம். வழமை போல இந்தக் கோட்டையிலும் ஒன்றுக்கு மேற்பட்ட நுழைவாயில்கள் இருக்கிறது இந்த நுழைவாயில் முற்றிலும் மாறுபட்ட இடத்துக்கு எம்மை கொண்டு சென்றது. சமத்தளத்திலேயே காணப்படும் சரிவான இரு பாறைகளை இணைத்தவாறு (அண்ணளவாக இரு பாறைகளும் 30 பாகை ஒன்றை ஒன்று நோக்கியவாறு சாய்ந்திருந்தது)  மட்டுமட்டாக எப்படியும் ஒரு 30 அடிக்கு மேல் உயரம் இருக்கும் 20 அடி மட்டில் நீளம் இருக்கும் 9-10 அடி அகலமான  முக்கோண குகை இருந்தது. (/_\) நடுவே சூரிய ஒளி தாராளமாக வந்து செல்ல கூடியதாகவும் இருந்தது சிறப்பு.

இப்போது இருக்கும் நவீன தொழிநுட்பத்தால் கூட இப்படி இரு பாரிய இயற்கை மலைகளை நமக்கு ஏற்றால் போல வளைத்து வைப்பது முடியாத காரியம். பண்டைய தொழிநுட்பங்களை பார்க்கும் போது எம்மை போல மனிதர்களால் மட்டும் இதனை செய்திருக்க முடியாதென்பது மறுக்க முடியாததும் ஆதாரமற்றதுமான நம்பிக்கை தான். காலம் ஒரு நாளைக்கு அனைத்தையும் வெளிப்படுத்தும் என கதைத்துக்கொண்டே அருகே இருந்த மிகவும் பதிவான அகலமான குகை ஒன்றை நோக்கி செல்கிறோம்.

பகுதி 5 தொடரும்…

-மட்டுநகர்_திவா

Share this Article
Leave a comment