தம்பிலுவில் கண்ணகி அம்மன் வழிபாட்டு பாரம்பரியமும் அதன் சடங்குமுறைகளும் – பகுதி 1

மட்டுநகர் திவா
மட்டுநகர் திவா
2 Min Read
தம்பிலுவில் கண்ணகியம்மன் ஆலயம்

அறிமுகம் ஆய்வின் தலைப்பு


திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தம்பிலுவில் கண்ணகி அம்மன் வழிபாட்டு பாரம்பரியமும் அதன் சடங்குமுறைகளும் ஆய்வு பற்றிய அறிமுகம்
பண்டைத் தமிழர்களிடையே நிலவிவந்த சக்தி வழிபாடே இன்று பிரசித்தி பெற்ற கண்ணகி வழிபாடு எனலாம்.

ஆதிகாலம் தொட்டு இருந்து வந்த பெண் தெய்வ வழிபாடே இன்று கண்ணகி வழிபாடாக பரிணமித்துள்ளது. வரலாற்றுக்கு முற்பட்டகாலங்களில் இருந்தே பெண் தெய்வ வழிபாடானது இருந்து வந்துள்ளது என்பதை ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன.

சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட பெண் உருவங்கள் சுடுமண் பொம்மைகள் என்பதை பாரக்கும்போது வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களில் இருந்தே பெண்தெய்வ வழிபாடு இருந்துள்ளது எனலாம்.

இவ்வாறு வழிபட்டு வந்த பெண் தெய்வம் வேதகாலத்தில் பல்வேறு பெயர் கொண்டு அழைக்கப்பட்டு வழிபட்டு வந்தன.

சங்க காலத்தில் கொற்றவை என்ற பெயரில் பெண்தெய்வ வழிபாடு நிலவி வந்தது.

அதனை தொடர்ந்து பல்லவ, சோழ, பாண்டியர் காலத்திலும் பெண் தெய்வமாக வழிபட்டுவந்துள்ளனர்.

சிலப்பதிகாரத்தில் பத்தினிக்கு கோயில் கட்டும் வழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இன்று கண்ணகி வழிபாடு பிரசித்தி பெற்றதாகவும் விளங்குகிறது. இக்கண்ணகி ஆலயங்கள் வருடத்திற்கு ஒரு தடவை திருவிழாவிற்காக திறக்கும் சடங்குகள் ஆரம்பமாகி வைகாசிப் பூரணை அல்லது வைகாசித் திங்களில் திருக்குளிர்த்தச் சடங்குடன் கதவு பூட்டப்படுகிறது.

இச்சடங்குகள் மக்களிடையே புனிதத் தன்மையும், பயபக்தியும் நிறைந்திருக்கும். இவ்வாறு அமைந்த கண்ணகி ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாக தம்பிலுவில் கண்ணகியம்மன் ஆலயம் விளங்கி வருகிறது.

ஆய்விற்கான கருதுகோள்


இவ்ஆய்வினை மேற்கொள்வதனால் தம்பிலுவில் கண்ணகி வழிபாட்டின் மகிமை பற்றியும் இப்பகுதி பழந்தமிழர்களிடையே நிலைத்துவந்த கண்ணகி வழிபாட்டு பாரம்பரியங்கள் சடங்குகள் சம்பிரதாயங்கள் பற்றி அனைவரும் அறிந்து கொள்ளமுடியும்.

அத்தோடு இவ்வாறான வழிபாட்டு முறைகளில் ஈடுபடுவதனால் மக்களிடையே ஒற்றுமை, புரிந்துணர்வு, சகோதரத்துவம், புனிதம், பயபக்தி, பிரதேச ஒருமைப்பாடு போன்ற மானுடவியல் அம்சங்களும் மேலோங்குகின்றன. எனவே சமய சடங்குகள் மக்கள் வாழ்வில் இன்றியமையாத ஓர் அம்சமாகும்.

இத்தகைய சடங்குகள் மேற்கொள்ளப்படுவதால் மக்கள் கடவுளுக்குப் பயந்து மனக்கட்டுப்பாடு,பயபக்தியுடன் செயற்படுவதால்குற்றங்கள்,தண்டனைகள் குறைக்கப்படுகின்றன.

எனவே இதன் அடிப்படையில் ஆய்வு முன்வைக்கப்படுகின்றது.

தொடரும்….

Share this Article
Leave a comment