தம்பிலுவில் கண்ணகி வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும்
திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசத்தில் பத்தினி வழிபாடாகிய கண்ணகி வழிபாட்டின் தோற்றம் பற்றி வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன.
15ம்,16ம் நூற்றாண்டுகளில் கிழக்கிலங்கையில் தமிழ் மன்னர்கள் ஆட்சிபுரிந்த காலத்தில் பிரபல்யம் பெற்றிருந்த இலங்கைத்துறை எனும் துறைமுகத்தினூடாக பாண்டிய நாட்டின் மதுரையிலிருந்து மூன்று அம்மன் விக்கிரங்கள் கொண்டு வரப்பட்டது.
அவற்றில் ஒன்று இலங்கை துறையிலும், மற்றயது சம்பூரிலும் ஆலயங்கள் அமைத்து பிரதிஸ்டை செய்யப்பட்டதாகவும் மற்ற அம்மன் சிலையானது மட்டக்களப்பிலுள்ள தம்பிலுவில் கிராமத்தில் கோவில் கொண்டிருப்பதாகவும் வரலாற்று செய்திகள் குறிப்பிடுகின்றது.
எனவே இதனைநோக்கும்போது கஜபாகு மன்னன் காலத்தில் கண்ணகி வழிபாடு அறிமுகமான இடங்களில் இருந்து இங்கு நேரடியாக வந்துசேரவில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எனவே இவ்வரலாற்றுச் செய்தியின் மூலம் கி.பி 2ம் நூற்றாண்டுகளில் கண்ணகி வழிபாடு இங்கு அறிமுகமானது என்பதை அறியமுடிகிறது. சமூக, சமய ஆய்வுகளும் இதனை வலியுறுத்துகின்றன.
கி.பி 2ம் நூற்றாண்டில் பாண்டியநாட்டில் இருந்து கண்ணகி வழிபாடு திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசத்தை நேரடியாக வந்தடைந்த இக்காலத்திலேயே பாண்டிய நாட்டிலும் கண்ணகி வழிபாடு சிறப்புற்றிருந்தது.
கஜபாகு மன்னனைப் போலவே பாண்டிய நாட்டில் வெற்றிவேற்செழியனும் சோழநாட்டில் பெருநங்கினியும் கண்ணகி ஆலயங்களை நிர்மாணித்து கண்ணகி வழிபாட்டை பரப்பி வந்தனர்.
எனவே பாண்டி நாட்டில் கண்ணகி வழிபாடு சிறப்புற்றிருந்த இக்காலகட்டத்திலேயே பாண்டிநாட்டின் மதுரையிலிருந்து இவ்வழிபாடு இப்பிரதேசத்திற்கு வந்து சேர்ந்ததாக கூறப்படுகிறது.
கி.பி 2ம் நூற்றாண்டில் திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசத்தில் நிலவியிருந்த அரசியல் சமூக கலாசார நிலைகள் என்பன இங்கு தமிழகத்தின் பாண்டிய நாட்டில் இருந்துநேரடியாக கண்ணகி வழிபாடு வந்து சேர்வதற்கு காரணியாக அமைந்திருந்தது எனலாம்.
இதனை பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் குறிப்பிடும்போது மட்டக்களப்பின் வெருகல் ஆற்றுக்கு கிழக்கேயுள்ள துறைமுகத்தில் மதுரை நகரிலிருந்து செண்பகநாச்சியம்மன், பத்திரகாளியம்மன் கண்ணகியம்மன் ஆகியோரது சிலைகள் 3 கொணடு வரப்பட்டதாகவும்
செண்பகநாய்ச்சியார் சிலையை ஈச்சிலம்பற்றிலும், பத்திரகாளி அம்மன் சிலையை சம்பூர் கடற்கரையிலும், கண்ணகி அம்மன் சிலையை மட்டக்களப்பின் தென்பகுதியில் உள்ள ஊரிலும் வைத்து வழிபட்டதாக வரலாற்றுச் செய்தி உண்டு எனகுறிப்பிடுகின்றார்.
இச் செய்தியானது தமிழகத்தில் இருந்து நேரடியாக இவ்வழிபாடு ஈழத்தின் கரையை அடைந்தது என்பதற்கு சான்றாகும்.
மேலும் மட்டக்களப்பு தமிழகத்தில் முதன்முதலாக கண்ணகி வழிபாடு திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசத்திலேயே அறிமுகமானது என்பதை வரலாற்று செய்திகள் வலியுறுத்துகின்றன.
கண்ணகி வழக்குரையில் கந்தபாணத் துறையூடாகவே கண்ணகியின் கால் சிலம்புக்கு நாகமணி எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
கி.பி 2ம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டின் மதுரையில் இருந்து கொண்டுவரப்பட்ட செண்பகச்செல்வி என்ற கண்ணகி விக்கிரகம் தம்பிலுவிலைச் சேர்ந்த ஊரக்கை என்னும் இடத்தில் ஆலயம் அமைத்து பிரதிஸ்டை செய்யப்பட்டது.
இக்காலத்தில் இருந்து கண்ணகிவழிபாடாகவும், பத்தினி வழிபாடாகவும் விளங்கி வந்த இவ்வாலயத்தின் வளர்ச்சிக்கு இந்த மதங்களை சேர்ந்த பௌத்தர்கள்மட்டுமன்றி சிங்கள பௌத்தர்களும் ஆதரவளித்து வந்துள்ளன்.
மேலும் கி.பி 2ம் நூற்றாணடு; தொடக்கம் கி.பி 12ம் நூற்றாணடு வரையும் பத்தினி வழிபாடு என்ற கண்ணகி வழிபாடு இப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்த சைவ மக்களிடையே செழித்திருந்தது என்பதை அறிய முடிகிறது.
பௌத்த, சிங்கள அரசர்களும், தமிழ்அரசர்களும், தமிழ், சிங்களவர்களும் இதற்கு தங்களது ஆதரவை அளித்து வந்துள்ளனர்.
இக்காலத்தில் பத்தினித்தெய்வமாகவும் கண்ணகை அம்மனாகவும் இப்பிரதேச மக்களால் போற்றப்பட்டு வந்த ஊரக்கை கண்ணகியம்மன் ஆலயத்தின் தொடர்ச்சியே இன்றுள்ள தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலயமாகும்.
தொடரும்…



