கி.பி 11ம் நூற்றாண்டளவில் இலங்கையை ஆண்ட முதலாம் விஜயபாகு தம்பிலுவில் ஊரக்கையில் குடிகொண்டிருந்த கண்ணகி அம்மன் மீது அளவற்ற பக்தியும் நம்பிக்கையும் கொண்டிருந்தார்.
இம்மன்னன் கண்ணகிக்கு நன்கொடைகளும் வழங்கியதாக கிராமிய இலக்கியம் ஒன்று குறிப்பிடுகிறது.
தனது ஆட்சி நிலைத்திருக்க வேண்டி கண்ணகியை வழிபட்டதாகவும் அதனைத் தொடர்ந்து முதலாம் விஜயபாகு மன்னன் இலங்கையில் தனது அரசியல் அதிகாரத்தை நிலை பெறச் செய்து பின்னர் பாதயாத்திரையாக வந்து அன்னையை வணங்கிகாணிக்கைகளையும் நகைகளையும் தங்க மாம்பழம் ஒன்றையும் நன்கொடையாக வழங்கினார் என்றும் கிராமிய இலக்கியம் குறிப்பிடுகிறது.
இக்காலம் தொடக்கம் கி.பி 12 ஆம் நூற்றாண்டு. மாகோனது ஆட்சிகாலம் வரை இப்பிரதேசத்தில் கண்ணகி வழிபாடானது உன்னத நிலையில் இருந்தது.
இக்காலத்தில் இக்கண்ணகி ஆலயமானது ஊரக்கை ஆற்றுக்கு வடக்கே உள்ள மேட்டுப்பகுதியில் அமைந்துள்ளது.
இப்பிரதேசம் கண்ணகி வழிபாட்டில் சில மாற்றங்கள் ஏற்பட்டாலும் கூட கி.பி 13ம் நூற்றாண்டில் இலங்கையை பாண்டியரகள் ஆட்சிபுரிந்த காலத்திலும் அதனைத் தொடர்ந்து கண்ணகி வழிபாடு செழித்திருந்தது.
இக்காலப்பகுதியில் சைவ சமயத்தவர்கள் கண்ணகியை பயபக்தியுடன் தாயார் என்றும் கண்ணகியம்மன் என்றும் வழிபட்டு வந்தனர..
கி.பி 14ம், 15ம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத் தமிழரசர் செல்வாக்கு கிழக்கிலங்கையில் கூமுனை வரை நிலைத்திருந்தது.
இம்மன்னர்கள் கண்ணகி வழிபாட்டை ஆதரித்து வந்தனர். இக்காலத்தில் திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசத்தில் கண்ணகி வழிபாடு உன்னத நிலையில் இருந்தது.
கி.பி 1395-1803 வரையுள்ள கண்டி மன்னர்கள் காலத்திலும் திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசத்தில் கண்ணகி வழிபாடு சிறப்புற்றிருந்தமைக்கு தொல்லியல் இலக்கியம் சான்றுகளுண்டு.
கண்டியுடன் இப்பிரதேசம் கொண்டிருந்த நெருக்கமான உறவுகள் இப்பிரதேசத்தின் கண்ணகி வழிபாட்டு வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்தது எனலாம்.
இரண்டாம் இராஜசிங்கன் காலத்திலும் இப்பிரதேசத்தில் ஏற்பட்ட கொடிய வரட்சியின் போது இம்மன்னன் தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயத்தை திறந்து விசேட பூசைகள் புரியும்படி பணித்துள்ளான்.
தம்பிலுவிலில் தோன்றிய இலக்கியமொன்று இம்மன்னனைப் புகழ்ந்து பாடுகிறது. மேலும் கண்டி மன்னன் ஸ்ரீ வீர நரேந்திரசிங்கன் காலத்தில் வாழ்ந்த வீர சைவ குரு ஒருவரினால் ஸ்ரீ வீர நரேந்திரசிங்கனைப் புகழ்ந்து பாடும் போது தம்பிலுவில் கண்ணகியம்மனையும் பணித்து பாடியுள்ளார்.
உந்த நறுந் சண்பகப் பூமாலை மாரப்பன் தென் இலங்கை
காவலன் நளீ மாவலி கங்கை குடையோன் சந்தனப்பு யாசலைச்
செந்தமிழினால் வழுத்தத் தம்பிலுவில் கண்ணகைத்தாய் தந்த தஞ்சநமக்கே (நரேந்திரசிங்கன் பள்ளு)
எனவே இதன் வாயிலாக கண்டி மன்னன் காலத்தில் தம்பிலுவிலில் கண்ணகி வழிபாடு செழிப்புற்றிருந்தது என்பதனை இலக்கியத்தின் வாயிலாக அறியமுடிகிறது.
மட்டக்களப்புத் தமிழகத்தின் பத்தினி வழிபாடு என்ற கண்ணகி வழிபாடு சிறப்புற்றிருந்த ஊர்களில் தம்பிலுவிலும் ஒன்றாகும் என்பதை கண்ணகி அம்மன் மீது பாடப்படும் ஊர்சுற்றுக் காவியம் எனும் இலக்கியத்தின் வாயிலாக அறியமுடிகிறது.
ஒருசமயம் மட்டக்களப்பு தமிழகம் எங்கும் மழை குறைந்து வரட்சி நிலவியிருந்த வேளையில் புலவர் ஒருவர் மட்டக்களப்பு தமிழகத்திலே கோவில் கொண்டுள்ள கண்ணகி அம்மனை நோக்கி மழை பொழிய வைக்குமாறு இருந்து வேண்டுவதாய் அமைந்த 17 பாடல்களில் 16ம் பாடலில் தம்பிலுவில் கண்ணகியம்மனை இரந்து பாடுகிறார்.
இக்காவியத்தின்வரும் தம்பிலுவில் மாநகரில் வீற்றிருக்கும் தாயேயிரக்கமுள்ள தர்ம தேவதையே என்ற வரிகள் தம்பிலுவில் கண்ணகிவழிபாட்டின் சிறப்பினை எடுத்துக் காட்டுகிறது.
இதற்கு பிற்பட்ட காலத்தில் 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காரைதீவு கிராமத்தில் தோன்றிய உடுக்குசிந்து என்ற கிராமத்து இலக்கியம் அக்காலத்தில் மட்டக்களப்புத் தமிழகத்தின் கண்ணகி வழிபாடு சிறப்புற்றிருந்ததை உறுதி செய்கிறது.
இவ் இலக்கியம் இக்காலத்தில் மட்டக்களப்பு தமிழகத்தில் (அம்பாரை உள்ளிட்ட) தென்பகுதியில் உள்ள பழம் பதியான் தம்பிலுவில் கண்ணகியம்மன் தொடங்கி வடக்கு நோக்கி எல்லா ஊர்களையும் வாழ்த்துவதாய் அமைந்துள்ளது.
72 பாடல்களைக் கொண்ட இவ்விலக்கியத்தில் 35ம்,69ம்,70ம,; 71ம் பாடல்கள் தம்பிலுவில் கண்ணகி பற்றி குறிப்பிடுகின்றது.
இதில் 70ம் பாடலில் பக்தியோடு தொழுவோர்கள் இடது தலவருள் பண்டு செறி தம்பிலுவில் பட்டிமா நகரம் மொய்த்த புகழ் வீரமுனை, கல்முனை, கல்லாறு என்ற வரிகளை பார்க்கும்போது இவ்வூரில் நெடுங்காலம் தொட்டு கண்ணகி வழிபாடு இருந்துள்ளது என்பதை தெளிவுபடுத்துவதோடு இவ் ஊரில் இருந்தே கண்ணகிவழிபாடு பட்டிநகர், வீரமுனை ஆகிய இடங்களை சென்றிருக்கலாம் என்பதனை உணர்த்துவதாக அமைகிறது.
எனவே இவற்றைத் தொகுத்துநோக்கும் போது தம்பிலுவிலில் கண்ணகி வழிபாடானது பழங்காலந்தொட்டு இருந்து வந்துள்ளது என்பதனை இலக்கியங்கள், தொல்லியல் சான்றுகள், வரலாற்று நூல்கள், காவியங்கள் வாயிலாக அறிய முடிகிறது.
எனவே இவற்றின் தொடர்ச்சியாகவே இன்று தம்பிலுவில் கண்ணகி வழிபாடானது சிறப்புற்று விளங்கி வருவதை காணலாம்.
தொடரும்…



