தம்பிலுவில் கண்ணகியம்மன் ஆலயத்தின் அமைவிடமும் சிறப்பும்
திருக்கோவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட தம்பிலுவில் பகுதியில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
வடக்கு கிழக்கு வாயிலுடன் சுற்றுமதிலும் அமைந்துள்ளது. கிழக்கு வாயில் பிரதானமானது இருந்து வடக்கு வாயில் வழியாகவே அம்மன் பவனி வருவதுண்டு.
கிழக்கு வாயில் வழியாக நோய் தீர்க்கும் தீர்த்தக் கிணறு அமைந்துள்ளது. தீர்த்தக்கிணற்றுக்கு எதிரே விநாயகர் ஆலயமும், சேகரம் கும்பம், கற்பகிரகம், மண்டபம் என்பவற்றுடன் காட்சியளிக்கிறது.
இவ்வாறு உட்பிரகாரத்தினுள் கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம், வெளி மண்டபம் கும்பங்களோடு கண்ணகியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
ஆதிகாலத்தில் கொத்துப்பந்தலில் அமர்ந்திருந்த கர்ப்பக்கரகம் சிறு குடிசையாக மாறி காலப்போக்கில் கற் கோயிலாக இருந்தது. பின்பு இவ்வாலயமானது ஆலய நிர்வாகத்தினராலும், மக்களின் நன்கொடையினாலும் புனரமைக்கப்பட்டது.
உட்பிரகாரத்தில் அண்மைக்காலத்தில் உருவாக்கப்பட்ட நாகதம்பிரான் கோவிலும் மேற்குப் புறத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தீர்த்தக் கிணறும் அமைந்துள்ளது.
வெளிப் பிரகாரத்தில் வைரவர் கோவில் அமைந்துள்ளது. வெளிப்பிரகாரத்தில் உள்திலையண்டி எட்டுத்திசையிலும் அட்டபாலகர் பீடங்கள் அமைந்துள்ளன.
ஆலய உற்சவ காலங்களில் இவை யாவற்றிற்கும் முறையாக பூசைகள் நடைபெறுகின்றன. ஆலயத்தை சுற்றி ஆல், வம்மி, தென்னை, போன்ற மரங்கள் நிறைந்து குளிர்ச்சி அளிக்கின்றன.
இவ்வாலயமானது ஒரு பாடல் பெற்ற தலமாகும். அதன்படி அக்காலத்தில் ஊரக்கைவெளி என்பது இவ்வூர் மக்களின்பூர்வீக சொத்தாகும்.
ஒருமுறை மழையில்லாமல் வரட்சி நிலவிய காலத்தில் இவ்வூரை சேர்ந்த கண்ணப்பர் என்பவரினால் மழைக்காவியம் பாட மழை பெய்ததாக சொல்லப்படுகிறது.
தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலய சடங்குமுறை கட்டமைப்பு
கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு தமிழகத்தில் பழந்தமிழர்கள் இடையே நிலவி வந்த கண்ணகியம்மன் ஆலய சடங்கு முறைகளை ஆராயும் போது ஆரம்ப காலத்தில் கண்ணகை அம்மன் ஆலயங்கள் மடாலயங்கள் விளங்கி வந்தமையால் பூசைகளும் வழிபாட்டுமுறைகளும் முழுக்க முழுக்க பத்ததி அடிப்படையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனை பத்தாசி என்றும் கூறுவர்.
கட்டாடி அல்லது கப்புகனார் என்று குறிப்பிடப்படும் பூசாரி பூஜைகளை நடத்தி வந்தனர்.
கி.பி17ம் நூற்றாண்டில் வடஇந்தியாவிலிருந்து அம்மன் விக்கிரங்களை அழைத்து வந்தவர்களின் சந்ததியினராவர்.
இன்று மட்டக்களப்பு கண்ணகி அம்மன் ஆலயங்களில் இத்தகைய பூசாரிமாரே பணியாற்றி வருகின்றனர். மடை, படையல் ஆகிய பூசையில் கல்யாணக்கால் நடுதல் போன்ற சடங்குகள் இடம்பெறுவதும் மரபாகும்.
கிபி 2ம் நூற்றாண்டில் கஜபாகு மன்னனால் தொடக்கி வைக்கப்பட்ட கண்ணகி வழிபாடானது தம்பிலுவில் பிரதேசத்தில் கண்டி மன்னர்களது ஆட்சி காலம் வரை உன்னத நிலையில் இருந்தது என்பதை இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது.
இவ்வழிபாடானது இன்று திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசத்தில் உள்ள மக்களின் வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்ததாகவும் அவர்களின் நம்பிக்கைக்குரிய வழிபாடாகவும் இருந்து வருகிறது.
இவ்வூர் மக்கள் கண்ணகையம்மனை தங்கள் குல தெய்வமாக கருதி தாயார் என்னும் உணர்வுடன் உருகி போற்றி வழிபடுகின்றனர். இம்மக்களுக்கு வரும் துன்பங்கள், சோதனைகள், வேதனைகள் என்பவற்றை எதிர்கொள்ளும் சமயங்களிலெல்லாம் அம்மாளே கண்ணகைத் தாயே எங்களைக் காத்தருள வேண்டுமம்மா என அம்மாளை வேண்டி வழிபடும் போது அவை நீங்கப்பெற்று வருகிறது.
எனவே மக்களின் நம்பிக்கைக்குரிய வழிபாடாக கண்ணகியம்மன் வழிபாடு இருந்து வருகிறது.
தொடரும்…



