செட்டிபாளையம் கண்ணகி அம்மன் / பகுதி 1

மட்டுநகர் திவா
2 Min Read
செட்டிபாளையம் கண்ணகி அம்மன் 1

கண்ணகி அம்மன் அறிமுகம்

உரைசால் பத்தினியை உயர்ந்தோர் போற்றுவர் எனத் தமிழின் முதல் காப்பியம் எனக் கூறப்படும் இளங்கோவடிகளால் ஆக்கப்பட்ட சிலப்பதிகாரத்தின் கதாநாயகியான கண்ணகியம்பாள் அன்று தொட்டு போற்றப்படுகிறாள் என அறிய முடிகிறது.

இவ்வாறான கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவன் கோவில் கட்ட அவனது இளவல் (இளங்கோவடிகள்) காப்பியம் படைத்தார்.

இக் கண்ணகி தான் யாவராலும் பத்தினித் தெய்வமாக வழிபடப்பட்டு வருகிறாள். இதன் பயனாக ஈழத்திலும் பல இடங்களில் கண்ணகி அம்மன் ஆலயங்கள் அமைக்கப்பட்டன.

அவ் ஆலயங்களின் வரலாற்றில் இயற்கை எழிலிடையே அமைந்துள்ள செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலயமும் குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

கண்ணகி அம்மன் செட்டிபாளையத்திலே மருத நிலப்பரப்பிலே மருதச்சோலை நடுவே கோயில்கொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கிறாள். இவ் இடத்தில் கோவில் கொண்டெழுவதற்கு  கருண பரம்பரைக்கதை ஒன்றும் உள்ளது.

செட்டிபாளையம் கண்ணகி அம்மன் குடியிருக்கும் இடத்தினை ஒத்த பகுதி ஒன்று கிரான்குளம் பகுதியிலும் உள்ளது. இதனை சிறாம்பியடி அல்லது பிள்ளையார் திடல் எனவும் அழைப்பர்.

இது கிரான்குளத்து மக்களின் குடியிருப்பின் மேற்கு பகுதியாகவும் மட்டக்களப்பு வாவிக்கு இடைப்பட்டதாகவும் உள்ள வயலும் வயல் சார்ந்த பகுதியானதொரு மருதநிலமாகும்.

இப்பகுதியிலிருந்து தான் கண்ணகியம்மன் வந்திருக்கக்கூடும் என்பது இந்த கருண பரம்பரைக் கதை.

சோழ நாட்டில் பிறந்து பாண்டிய நாட்டில் பழிவாங்கி சேர நாட்டிலே தெய்வமாகிய பத்தினித்தெய்வம் கண்ணகியை கஜபாகு மன்னன் இலங்கைக்கு கொண்டு வந்தான்.

இது கண்டியை விமலதருமன் ஆட்சி செய்யும் போது போத்துக்கேயர் இலங்கையின் கரையோரப்பகுதிகளை முற்றுகையிட்டிருந்த காலம்.

அப்போது போத்துக்கேயர் இந்து ஆலயங்களையும் பெளத்த விகாரைகளையும் இடித்து கிறிஸ்தவ மத தேவாலயங்களை வகுத்துக்கொண்டிருந்தனர்.

இதை விமலதருமன் அறிந்து மலாய வீரர்களைகொண்டு போத்துக்கேயரை விரட்டியடித்தான்.

இதை அறிந்த நாடாரும், நம்பிகளும் தங்களிடம் உள்ள கண்ணகியம்மன் சிலைகளையும் தங்களையும் மட்டக்களப்பில் கொண்டு குடியேற்றி விடும்படி வேண்டினர்.

கந்தப்பரும் ஆலோசனை செய்து இனியும் விட்டு வைத்தால் மட்டக்களப்பில் கிறிஸ்தவமே பரவிவரும் என நினைத்து

  • ஏழு நாடாரக் குடும்பங்களையும்
  • மூன்று நம்பிக் குடும்பங்களையும்
  • ஏழு ஆலய ஊழியர் குடும்பங்களையும்
  • ஏழு கண்ணகி சிலைகளையும்
    தயார் செய்து ஓடத்தில் ஏறி மண்முனைக்கு அருகாமையில் வரும் போது பெரும் காற்றும் மழையும் ஏற்பட்டு படகு தத்தளித்தது. 

அந்தநேரம் அம்மன் சிரித்ததாகவும், பெரும் கஷ்டத்தின் மத்தியில் அம்மன் அருளால் கரைதட்டியதாகவும் கதைகள் கூறுகின்றன.

சிறாம்பியடி பிள்ளையார் கோவில். (ஏழு கண்ணகி சிலைகளும் முதலில் வைக்கப்பட்ட இடம்)

அம்மன் சிரித்த நேரம் “கந்தப்பன் மகிழ்கிறார்” என சத்தம் கேட்டதாகவும். இவ்விடத்தை “மகிழடி” என அழைத்து கரைதட்டிய இடத்தில் சிறாம்பிக்கட்டி அம்மன் விக்கிரகங்களை எழுந்தருளி வழிபட்டனர்.

சிறாம்பியடி பிள்ளையார் கோவில் உள்ள மூலவர்.

தொடரும்..

- மட்டுநகர் திவா 

Share this Article
Leave a comment