கண்ணகி அம்மன் தோற்றம்
இச் சம்பவத்தினை மட்டக்களப்பு ஒற்றன் ஒருவன் கண்டியை அரசுபுரியும் விமலதருமனுக்கு
“ஒத்துக்குடாவில் இருந்து வந்த கந்தப்பரின் குழு பற்றியும், ஏழு கண்ணகி விக்கிரகங்கள் பற்றியும், இவர்கள் அனுமதியின்றி குடியிருக்கிறார்கள் எனவும் , போத்துக்கேயருக்கு வேவுபாக்க வந்திருப்பவர்கள் போலவும் இருக்கு ”
என்று திருமுகம் வரைந்து அனுப்பி விட்டான்.
விமலதருமனும் அந்த திருமுகத்தினை வாசித்து எங்கள் உத்தரவு இல்லாமல் குடிவந்திருக்கிறார்கள் எனவே
- கந்தப்பரையும், அவனது சகோதரிகளையும் களப்பில் தாட்டு கொல்லவும்
- அவனது புத்திரியை கலிங்க குலத்தவன் ஒருவனுக்கு திருமணம் செய்து வைக்கவும்
- ஆறு கண்ணகியம்மன் விக்கிரகங்களையும் மட்டக்களப்புக்கு பிரதானமாக உள்ள ஏழு ஊர்களில் இருத்தவும்
- வந்து இருந்த இடத்திலே ஒரு விக்கிரகத்தை வைக்கவும்
- கோவிலாரே ஆலய ஊழியராக இருக்கவும்
என ஒரு திருமுகம் வரைந்து அனுப்பிவிட்டான்.
விமலதருமன் உத்தரவை அறிந்த படைவீரர்கள் திருமுகத்தில் இருந்த கட்டளைகளை நிறைவேற்றி பின் ஆறு கண்ணகியம்மன் விக்கிரகத்தினையும் மட்டக்களப்பின் பிரபல்யமான இடங்களில் நிறுத்தி நாடாரே பூசகராகவும், கோவிலாரே ஊழியராகவும் திட்டஞ்செய்து வைத்தனர்.
கண்டி அரசன் இராஜாதி இராஜசிங்கன் (1782-1798) முடித்தரிப்பதற்கு மட்டக்களப்பினை சேர்ந்த அறுமக்குட்டிப்போடி, கந்தப்போடி என்பவர்களோடு நிதியதிபர்களையும் அழைத்து முடிசூடிக்கொண்டான்.
அறுமக்குட்டிப்போடி வைரமாலையும், கந்தப்போடி வராகன் மாலையும் இராஜசிங்கன் கழுத்தில் போட்டு வாழ்த்தினர்.
அறுமக்குட்டிப்போடியார் கிரான்குளத்தில் இருந்த போது ஒத்துக்குடா கந்தப்பரால் கொண்டுவரப்பட்டு இருந்த இடத்தில் சிறாம்பி கட்டி வழிபடப்பட்டுக்கொண்டிருந்த அம்மன் கண்ணகியம்மன் அறுமக்குட்டிப்போடியார் கனவில் வந்து
“எனக்கு பிள்ளைக்குரல் கேட்டு சகிக்க முடியவில்லை, மஞ்சள் இடி மாவிடி சத்தம் பொறுக்க முடியாது உள்ளது, வெப்பம் சகிக்க முடியாத்துள்ளது. ஆகவே என்னை செட்டிபாளையம் கிராமத்தில் மருதநிலைச் சோலையிலே ஆலயம் அமைத்து ஏழு ஊரும் சேர்ந்து வழிபடுங்கள்”
எனக் கூறினார். அம்மன் வாக்குப்படி கிரான்குளம், குருக்கள்மடம், செட்டிபாளையம், தேற்றாத்தீவு, களுதாவளை, பழுகாமம், அம்பிளாந்துறை ஆகிய கிராமங்கள் சேர்ந்து வழிபாடாற்றி வந்தனர்.
கிரான்குளப்பகுதியில் இருந்து கண்ணகியம்மன் சிலை கொண்டுபோனபடியாலும் அறுமக்குட்டிப்போடியார் கிரான்குளத்தில் வாழ்ந்தபடியாலும் கண்ணகியம்மனின் தாயூர் கிரான்குளம் எனவும் மக்களால் பேசலாயிற்று.(மட்டக்களப்பு மான்மியம்: பக்கம்-68)
தொடரும்..
- மட்டுநகர் திவா 


