செட்டிபாளையம் கண்ணகி அம்மன் / பகுதி 3

மட்டுநகர் திவா
2 Min Read
செட்டிபாளையம் கண்ணகி அம்மன் 3

அமைவிடம்

இயற்கை எழிலிடையே அமைந்துள்ள செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலயம் மட்டக்களப்பின் தெற்கு பக்கமாக மட்டக்களப்பு கல்முனை வீதியில் 20 Km (12 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.

இவ் ஆலயம் எப்போது யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்ற வரையறை இல்லாவிடினும் குறித்த கால வரலாற்று அம்சங்களை செவிவழியாகவும், சிலவற்றை ஆதாரப்பூர்வமாகவும் அறிய முடிகிறது.

ஆரம்பத்தில் வம்மி மரத்தின் நிழலிலே ஓலை கிடுகுகளால் கோவில் அமைத்து வழிபட ஆரம்பித்தனர் என கருணபரம்பரை கதைகளின் தொடர்ச்சிகள் கூறுகின்றன.

சின்னஞ்சிறிய ஓலைக்கிடுக்குகளால் அமைக்கப்பட்டு வழிபட்டுவந்த அன்னையின் ஆலயத்தினை கற்களால் கட்டி எழுப்பும் காலம் நெருங்கிய அவ்வேளையில் கண்ணகி அம்பாளே மாறுவேடத்தில் வந்து “நிலையம்” எடுத்துக் கொடுத்தார்.

அம்மனே கல் வைக்கும் சுப வேளையை கூறியதாகவும், அச் சுபமுகூர்த்த வேளையில் கடலில் இடி போன்ற சத்தம் கேட்கும் எனவும் கட்டியாரே (பூசகர்) அந்தநேரம் கல் நாட்ட வேண்டும் என்றும் கூறினாராம்.

இதனால் இச்சத்தம் கேட்டு கோவிலடிக்கு அறிவிக்கும் முகமாக கிரான்குளம் தொடக்கம் களுதாவளை வரையில் கடற் கரையில் ஆட்கள் சத்தத்தினை அவதானிக்க நின்றனர்.

கோவிலில் இருந்து கடற்கரை வரை அடர்ந்த காடுகளை வெட்டி மக்களை நிறுத்தி அவ் இடியோசை கேட்டதும் வரிசைக்கிரமமாக  சொல்லவேண்டும் என்றும் இறுதியாக கட்டியாரை அடைய அடிக்கல் நடுவதற்கான  ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனவாம்.

கல்வைக்க வேண்டிய சுபவேளை வந்ததும் ஏற்பட்ட இடி போன்ற சத்தம் கட்டியாருக்கு மட்டும் கேட்டது. கேட்டவுடன் அவர்அடிக்கல்லை நாட்டியதாகவும் தொடர்கிறது கர்ணபரம்பரைக் கதைகள்.

இதற்கு சான்றளிப்பதாக கடற்கரை வரை வெட்டிய வழி இன்றும் மக்களால் பயன்படுத்தப்படுவதனை காணக்கூடியதாக இருக்கிறது.

கண்ணகியம்மன் சடங்கு வருடந்தோறும் வைகாசித் திங்கள் திருக்குளிர்த்தி நடைபெறுவதும் அதற்கு முந்திய இரவு கதவு திறப்பு சடங்கு நடைபெறுவதும் தற்போதைய வழக்கம்.

1891 ஆம் ஆண்டு ஆனி மாதம் 11 ஆம் திகதி வைகாசிப் பூரணை சடங்கு என்று கூட்டக்குறிப்பு ஒன்று உள்ளது. 

தற்போது வைகாசி சடங்கு என கிராம மக்களிடையே பேசப்படுவது கண்ணகியம்மன் சடங்கேயாகும்.

இது நூற்றாண்டு காலங்களுக்கு மேலாக பேச்சு வழக்கில் இருந்து வருகிறது என்பதற்கு சான்று பகிர்கிறது.

1948 க்கு முன் சனி இரவு கதவு திறந்து திங்கள் குளிர்த்தியுடன் நிறைவு செய்துவந்ததாக அறியமுடிகிறது. குளிர்ச்சி என்பது குளிர்த்தி ஆகியிருக்கலாம். (மட்டக்களப்பு மான்மியம் – 7,8,41,42 ஆம் பக்கங்கள்)

தொடரும்..

- மட்டுநகர் திவா 

Share this Article
Leave a comment