வைகாசி பிறந்தாலே தாயவளின் வருகைக்காக காத்து கிடக்கும் மட்டக்களப்பு தேசம் முழுவதும். கோடைவெயிலின் கோரதாண்டபத்தில் சூழ்ந்து கிடக்கும்
தேசம் எல்லாம் தாயவளின் வருகையினால் ஊர் முழுவதும் குளிர்மை கொள்ளும் என்று ஊர் பேச்சுவழக்கு இன்றும் உள்ளது. அந்த பேச்சுவழக்கு இறவாத உண்மையே..!
சூழலில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் போது அம்மை நோய் (chicken pox) தாக்க கூடும் என்கிறது மருத்துவம். இந்த நோயில் இருந்து சுலபமாய் விடு பட ஊர் முழுப்பதும் வேப்பிலை தோரணம் கொண்டு அலங்கரித்து வாசலில் மஞ்சள் நீர்தெளித்து ஊர் முழுவதும் செழிப்புற்று இருக்கும் தாயவளை அரவணைக்க இவ்வாறு தயார்க்கொள்ளும் முறையில் மருத்துவ அறிவும் மறைந்து இருக்கின்றது.
சரி..
வாருங்கோவன் கோரா வெளி பக்கம் சென்று வருவோம்.
“பார் பொருந்தும் கண்ணகையாள் பழிவாங்கி குளிர்ந்தகதை, ஊர் செழிக்கபாடுகிறேன்”
கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு நகரில் இருந்தது வடக்கு நோக்கி சென்றதும் கிரான் நாற்சந்திவரை சென்று அங்கிருந்து மேற்கு நோக்கி சென்றதும் புலிபாய்ந்த பாலம் எனும் இடம் வரை சென்று அங்கிருந்து வடமேல்திசையில் சென்றதும் கோரா வெளியினை அடைய முடியும்.
காட்டு பகுதியின் மத்தியில் கொக்கொட்டி மரசோலை சூழ சுற்றிவர சலசலத்து ஓடும் நதிக்கரையின் மத்தியில் உயர்ந்த மணல் புட்டியின் மத்தியில் குடி கொண்டுள்ளாள் கண்ணகையாள்.
இயற்கை எழில் கொஞ்சும் கொக்கொட்டிமரச்சோலை நிழலும் சசல வென ஓடும் நதியின் சத்தமும் வீசுகின்ற தென்றல் காற்றும்மனதுக்கு இதமான சூழல்தான்.
அமைதியின் இருப்பிடமான கோராவெளிபதி தனில் சினம் தணிந்தாள் தாயவள் கண்ணகையாள். மதுரைநகரைஎரித்த கண்ணகிசினம்கொண்டு இலங்கையின் வந்தாறுமூலையில் (வந்துஆறியமூலை) வந்ததாகவும் அங்கிருந்து காட்டுவழிபாதையில் சென்றதாகவும்பின்னர் அழகு கொஞ்சும் கோராவெளியில் வந்து கொக்கொட்டிமரத்தடியில் அமர்ந்தாள் எனவும் வரலாறு சொல்லப்படுகின்றது.
இதனை கண்ட வேடுவ ஆதிவாசிகள் அருகில் உள்ள கிராமத்தவரிடம் சென்று சொன்னதாகவும் அங்குவந்த கிராமத்தவர்கள் அம்மனுக்கு பொங்கல் படைத்து வழிபட்டபோது சினம் தணிந்ததாயவள் மனம் குளிர்ந்து காட்ச்சிகொடுத்தாள்.
“ஆண்டு தோறும் வைகாசி பௌர்ணமிக்கு நான் இங்குவருவேன்”
என்று வாக்கு கொடுத்து சென்றாள் கண்ணகியாள் என வரலாறு சொல்கின்றது.
தாயவளின் வாக்கிற்க்கு இங்க இன்று வரை இங்கு ஆண்டு தோறும் கொத்துப்பந்தல் அமைத்து வைகாசி பௌர்ணமிக்கு அம்மன் திருச்சடங்கு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
கோராவெளியை அண்டியுள்ள ஏழு ஊர்( கிரான், சித்தாண்டி, முறக்கட்டாஞ்சேனை, சந்திவெளி, கோரைகல்லிமடு, கிண்ணையடி, மிறவோடை) மக்களும் வைகாசி பௌர்ணமிக்கு முதல்நாள் சென்று அங்கு ஏழு ஊருக்கும் என தனிதனியான கொத்துப்பந்தல் அமைப்பர்.
மறுநாள் வைகாசி பௌர்ணமி அன்று தேவாதிகள் தலைசுற்ற அம்மனுக்கு பொங்கல் படைத்து, மடைவைத்து, காவியம்பாடி, உடுக்கை ஒலிஊர் முழுவதும் கேக்க அவள் மனம்குளிர திருக்குளிர்த்தி சடங்கு இனிதே இடம்பெறும் வழமை இன்றும் சிறப்பாக இடம்பெறுகின்றது.
இங்கு பச்சை மர குற்றியில் அடுப்பு அமைத்து பொங்கல் பொங்கும் நிகழ்வு சிறப்பம்சம் ஆகும்.
அதிசயிக்க தக்க விடயம் என்ன வெனில் ஆதிகாலத்தில் அமைத்த தாய்ப்பந்தல் ஆனது நான்கு கொக்கொட்டி மரங்களைவைத்து அமைக்கப்பட்டது.
அந்த நான்கு மரங்களும் இன்று வரை வளர்ச்சி இன்றி ஒரே அளவில் மிக நீண்ட காலமாக இருக்கின்றது. அந்த மரங்களை கொண்டதாகவே இன்றும் கொத்துப்பந்தல் அமைக்கப்படுகின்றது.
இதுமட்டும்மல்ல…அம்மனின் திருவருளை உணர்த்த மக்கள் இவ்விடத்தில் கோயில் கட்ட வேண்டும் என கருதி கற்கோயில் இங்கு கட்டப்பட்டது.
ஆனால் அம்மனோ அதனை ஏற்க மறுத்தாள். காட்டு வெள்ளமாய் கோரத்தாண்டவம் கொண்டு கட்டிய கோயில் உடைந்தது. உடைந்த ஆலயத்தின் கட்டட எச்சங்கள் இன்றும் காணக்கூடியதாக உள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் எளிமையான இந்த கோராவெளி கொத்துப் பந்தலில் இன்றும், என்றும் தாயவள் கண்ணகி அம்மன் குடிகொண்டு கேட்க்கும் வரங்களை எல்லாம் வழங்கி கொண்டு இருக்கின்றாள்.
ஆண்டு தோறும் வைகாசி பௌர்ணமிக்கு அவளின் தரிசனம் காண ஏங்கி கிடக்கும் பிள்ளைகளில் நானும் ஒருத்தன்.
“ஏயதோர்செல்வமும்சென்நெல்லின்விளைவும்இன்பமுடன்தந்துஎங்கள்துயர்தீர்ப்பாய்..”
என்றும்அன்புடன்.
நிகோஷ்..






















