படுவான்கரை – மட்டக்களப்பு மரபுகளின் உறைவிடம்

மட்டுநகர் திவா
மட்டுநகர் திவா
3 Min Read

இன்றைய மட்டக்களப்பினை எழுவான்கரை, படுவான்கரை எனப் பிரித்து விளங்கிக் கொள்வர்.

எழுவான்கரை என்பது கடல்சார்ந்த பிரதேசம். படுவான்கரை என்பது வயலும், காடும் சார்ந்த பிரதேசம்.

இரண்டையும் பிரிப்பது 25 மைல் நீளமுடைய வாவியாகும். இப்பிரதேச மக்களினது வாழ்வில் இவ்வாவி முக்கிய இடம் வகிக்கின்றது. இரு பகுதிகளும் வாவியால் பிரிக்கப்பட்டு இருப்பதாலும் போக்குவரத்து வசதிகள் எழுவான்கரைப் பகுதிக்கு பெருமளவு இன்மையாலும் எழுவான்கரையில் ஏற்பட்ட மாற்றங்கள் படுவான்கரையில் பிரதிபலிக்க வாய்ப்புகள் இருக்கவில்லை.

பிரிக்கப்பட்ட பிரதேசமாக, பழைய வாழ்க்கை முறையிலும் பண்பாடுகளிலும் ஊறிய பிரதேசமாக படுவான்கரை அமைய வேண்டியதாயிற்று. இதனால் படுவான்கரைக்கும் எழுவான்கரைக்குமிடையே பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

நாகரீக வளர்ச்சியால் பூர்வீகத்தை மறக்கும் மட்டக்களப்பும் அதனை காக்க துடிக்கும் படுவான்கரையும்.

படுவான்கரையில் பழைய நிலவுடமை முறை பேணப்படுவதனால் அங்கு நிலம் சார்ந்த பொருளாதார உற்பத்தி முறை அமைந்திருப்பதும் அதனால் அவ்வுற்பத்தி முறையை ஒட்டியே வாழ்வு அமைந்திருப்பதும் இதனால் நிலவுடைமைசார் சமூக உறவுகள், பண்பாடுகள், சாதி இறுக்கங்கள், சாதி மரபுகள் என்பன அமைவதும் இயல்பு. அதனையே இங்கும் காணுகின்றோம்.

எழுவான்கரை பணப்பொருளாதாரம் (முக்கியமாகக் கடைகள், உத்தியோகம்) சார்ந்திருப்பதால் அதன் தன்மையை ஒட்டி சமூக வாழ்வு அப்பகுதியில் அமைந்துள்ளது. பணப்பொருளாதார முறையிலமைந்த பண்பாடுகளை இங்கு காணமுடிகிறது. (முக்கியமாக படுவான்கரையிலில்லாத வித்தியாசமாக சமூக உறவுகளைக் காண்பதுடன் சாதிப் பிரிவினைகள் படுவான்கரையைப் போல் இறுக்கமாகவன்றி தளர்வாகவே காணப்படுகின்றன.)

படுவான்கரையில் போடிமார், கோயில் வண்ணக்கர்மார், கோயில் உரிமையாளர்கள், குடும்ப மரபில் பெருமை பெற்றோர் சமூக மதிப்புடையோராகக் காணப்பட, எழுவான்கரைப் பகுதியில் ஆங்கிலக் கல்வி, பணப் பொருளாதார வருகை காரணமாக அரசாங்க உத்தியோகத்தர்கள், கடைக்கார முதலாளிகள் சமூக மதிப்புடையோராகக் காணப்படுகின்றனர்.

படுவான்கரைப் பகுதியில் முக்குவர், வேளாளர், சீர்பாதக்காரர்களைச் சார்ந்து வாழ்ந்த அடிநிலை மக்களாகக் கருதப்படும் பறையர், வண்ணார், அம்பட்டர் போன்ற இனக் குழுமங்களும், கரையாரும் படுவான்கரைப் பகுதியில் தனித்தும் சுயாதிபத்தியத்துடன் தமக்கென தனிப்பட்ட கோயில்கள், வழமைகள், கொண்டோராய் எழுவான்கரைப் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

அண்மைக் காலமாக இவர்களின் கோயில்களுக்கு அனைத்துச் சாதி மக்களும் பெருந்திரளாகச் செல்வது (உதாரணமாக வண்ணாரின் பாரம்பரியக் கோயிலான புன்னச்சோலைக் காளியம்மன், நளவரின் பிரதான கோயிலான கூழாவடி நரசிங்க வைரவர், கரையாரின் கோயிலான நாவலடி கடல் நாச்சியம்மன்) எழுவான்கரைப் பகுதியில் சமூக இறுக்கம் தளர்ந்து வருவதற்கான சிறந்த உதாரணங்களாகும்.

படுவான்கரை தற்போது மரபழிந்துகொண்டு போக காரணம்

எழுவான்கரையை ஒட்டிப் பரவிய கிறிஸ்தவ மதம் உருவாக்கி விட்ட கிறிஸ்தவ நாகரிகமும் இரண்டாம், மூன்றாம் நிலையில் வைத்துப் பார்க்கும் சாதியினர் முக்கியமாக கரையார் சமூகத்தினர் கல்வி கற்று உத்தியோகங்கள், சிறுதொழில்கள் பார்ப்பதனால் தமது சாதித் தொழில்களையும் தாண்டி புதிய பொருளாதார உற்பத்தி உறவுகளினடியாக செயற்படுவதும் படுவான்கரைப் பகுதியில் வாழும் மட்டக்களப்புச் சாதியமைப்புக்கு அகப்படாத முஸ்லீம்கள், பறங்கியரது வாழ்க்கை முறையும், அவர்கள் ஏனைய சாதியினருடன் கொள்ளும் சாதி பேதமற்ற உதவிகளும், மட்டக்களப்பின் நகர வளர்ச்சியும், வெளியில் ஏற்படும் நாகரிகப் போக்கு மாற்றங்கள், மட்டக்களப்பு நகரைப் படுவான்கரைப் பகுதியைவிட அதிகம் பாதிப்பதும் எழுவான்கரைப் பிரதேசத்தை படுவான்கரைப் பிரதேசத்தினின்றும் வித்தியாசப்படுத்தும் காரணங்களாகும். இதனால் ஒருவகையில் பாரிய சமூக அசைவியக்கம் ஒன்றினை படுவான்கரைப் பகுதியில் காண முடிகின்றது.

மரபுகளைப் பேணும் கட்டிக்காக்கும் பிரதேசமாக படுவான்கரை திகழ, மரபுகளினின்று மாறிவரும் பிரதேசமாக எழுவான்கரை திகழ்கிறது.

இப்புதிய மாற்றங்கள் படுவான்கரைப் பிரதேசத்தில் இல்லாமல் இல்லை. தவிர்க்க இயலாத வகையில் புதிய பொருளாதார மாற்றங்கள் கிறிஸ்தவ மதம், கல்வி மாற்றங்கள் என்பன படுவான்கரைக்கும் சென்றமையினால் அங்கும் சமூக அசைவியக்கம் ஏற்படாமல் இல்லை.

ஆனால் ஒப்பீட்டளவில் அவ்வசைவியக்கம் மிகக் குறைவானதாகவும், பாரம்பரிய முறைகளை மீறாத அளவிலுமே அப்பகுதியில் காணப்படுகின்றது.

பேராசிரியர் சி.மெளனகுரு 

Share this Article
Leave a comment