தொடர்ச்சி..
தமிழில் வழிபாடு தொடங்கியதற்கு ஒரு படங்கதையும் கூறப்படுகிறது. இவ்வூரில் ஆதிக் குடியினர் எனப்படும் வேடக்குடியினர், கோரைக்களப்புக் குடியினர், குருக்கள் குடியினர் எனப்படும் வம்சத்தினர் வசித்து வந்தனர்.
அக்காலத்தில் இவ்வாலயம் அமைந்த இடமானது காடாக இருந்தது. ஒரு சமயம் அங்கு வேட்டைக்கு செனற் குழுவினர் ஒரு பெண் புறா வந்ததையும் அவை சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு கண்ணகை என்று கூறிச் சற்று இருந்துவிட்டு திடீரென ஓர் இடத்தில் சென்று மறைந்ததை கண்டு அவ்விடத்தில் கொத்துப் பந்தல் அமைத்து எனையோரையும் சேர்த்து கண்ணகியம்மன் என்று வழிபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இவர்கள் கோயிலில் தொண்டு செய்தார்களே தவிர முறையான பூஜைகளை செய்ய முடியாமல் திண்டாடினர். இவ்வேளையில் வந்திறங்கிய அன்னப்புறவர், ஈச்சம்வத்தையார் எனும் இரு வம்சத்தினரும் கோயில் நிர்வாகத்தை பொறுப்பேற்றுக் கொள்வதாகக் கூறப்படுகிறது.
இக்கோயிலின் சிறப்பம்சமாக விளங்குகிறது இவ்வாலயத்தில் வருடாவருடம் வைகாசிப் பூரணையையொட்டி நடைபெறும் கண்ணகியம்மன் சடங்கும் திருக்குளிர்த்தியுமாகும்.
பண்டைக்காலத்தில் ஊரக்கையில் அமைந்திருந்த கண்ணகையம்மன் ஆலயத்தின் தொடர்ச்சியாக விளங்கிவரும் தம்பிலுவில் கண்ணகியம்மன் ஆலயத்தில் நடைபெற்றுவரும் இவ்வழிபாடானது இவ்வூரின் பாரம்பரிய சிறப்புக்களை தெளிவுபடுத்தும் பெருவிழாவாக இருந்து வருகிறது.
இவ்வாலயத்தில் வருடாந்த உற்சவமானது வைகாசிப் பௌர்ணமியை ஒட்டி வரும் ஏழு நாட்களை அண்டிய ஒரு செவ்வாய்க் கிழமை கதவு திறத்தலுடன் ஆரம்பமாகும்.
அதனைத் தொடர்ந்து ஐந்து நாட்கள் பூசைகளும் திருவிழாக்களும் கோலாகலமாக நடைபெறும்.
ஆறாவது நாள் அம்மன் ஊர்வலமும் ஏழாவது நாள் பொங்கலும் குளிர்த்தியும் நடைபெற்று திங்கள் இரவு கதவு அடைத்தலுடன் உற்சவம் நிறைவுபெறும்.
“வைகாசித்திங்கள் வருமோ என்று மாதுமையாளும் வரம் கொடுத்தாளே”
என்பதற்கிணங்க திங்கட்கிழமையே பொங்கலும் குளிர்த்தியும்நடைபெறுகிறது.
முதலாம் நாள் பூசைகள் சிறப்பாக நடைபெற்ற இந்த இரண்டாம் நாள் மண்ணெடுத்தல் வைபவம் நடைபெறும்.
குறிக்கப்படட் காலத்தில் குறித்த இடத்திலிருந்து மேளவாத்தியங்களுடன் மண்எடுத்து வரப்படும்.
இந்த மண்ணைக் கொண்டே மட்பாண்டத் தொழில் தெரிந்த பெண்களால் அம்மன் பொங்கலுக்குரிய பானைகள், சிறிய பானைகள் என்பன செய்யப்படும்.
ஆலயம் திறந்ததிலிருந்து பூசைகளும் திருவிழாக்களும் ஐந்து நாட்களும் கண்ணகை வழக்குரை காவியம் படிக்கப்படும்.
அதனைத்தொடர்ந்து ஆறாவது நாள் நடைபெறுவது கல்யாணக்கால்நடுதல் என்ற சிறப்புச் சடங்கு நடைபெறும். இது மிகவும் சிறப்பானதாகும்.
இங்கு கல்யாணக்கால் நடுவதற்காக தேர்ந்தெடுக்கப்படட் வேப்பமரத்திலிருந்து பெறப்படும் கல்யாணக்கால் அம்மன் ஆலயத்தின் பிரதானமண்டபத்தில் நடப்படும்.
இது பட்டுத் துணிகளாலும், மலர்களாலும், இளநீர்களாலும், தென்னங்குருத்துக்களாலும், பிற பொருட்களாலும் நன்றாக அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
அதனை தொடர்ந்து வழமையாக பாடப்படும் கண்ணகி வழக்குரைக் காவியத்தின் நாகமணி மீகாமனால் கொண்டுவரப்பட்டு சிலம்பியற்றி கண்ணகி கோவலன் திருமணம் நடைபெறுடலாகிய கல்யாண படிப்பு நடைபெறும்.
அன்றையநாளே உரியமுறையில் கல்யாணக்கால் நாட்டி அலங்கரிக்கப்படும்.
அதன் பின்னரே மிகுதி வழக்குரை பாடப்படும்.
ஆறாவதுநாள் இரவு அம்மன் ஊர்வலம் மிகவும் விமர்சையாக நடைபெறும்.
அன்றைய தினம் இப்பிரதேசம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கும். அன்றிரவு நன்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் கோயிலின் வடக்கு வாயிலாக அம்மன் ஊர்வலம் ஆரம்பமாகும்.
இது ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும். பலவர்ண மின்விளக்குகளுடன் வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் சூழ்ந்துவர அம்மன் பாரினில் பவனி வருவார்.
அதேவேளை அம்மம்மா அம்மம்மா கூய், அம்மம்மா அம்மம்மா கூய் என்ற ஓசை வானைப்பிளக்கும்.
அம்மனின் தேருக்குப் பின்னால் பக்தர்கள் அம்மன் காவியத்தை பாடிவருவர். அத்தோடு கும்மிப்பாடடு, ஊர்சுற்றுக் காவியம் என்பனவும் பாடப்படும்.
அம்மன் தேருக்கு முன்னால் காவடியாட்டம், பக்திப்பரவச ஆட்டம், இளவட்டங்களின் துள்ளலாட்டம் மேளவாத்தியங்கள் ஒலிக்க உடுக்கை என்பவற்றோடு அம்மன் ஊர்வலம் தொடரும்.
தொடரும்…..
முன்னைய பதிவாகிய தம்பிலுவில் கண்ணகி அம்மன் வழிபாட்டு பாரம்பரியமும் அதன் சடங்குமுறைகளும் – பகுதி 4 என்பதனை பார்வையிட இங்கே சொடுக்கவும்.



