தம்பிலுவில் கண்ணகி அம்மன் வழிபாட்டு பாரம்பரியமும் அதன் சடங்குமுறைகளும் – பகுதி 6

மட்டுநகர் திவா
மட்டுநகர் திவா
3 Min Read
கண்ணகி

தொடர்ச்சி..

இவ்வாறு அம்மன் ஊர்வலம் வரும்போது இப் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் வீதிகளில் இருமருங்கிலும் தமதுஇல்லங்களுக்கு முன்னால் சிறிய பந்தலிட்டு அதில் குருத்துக்கள், மாவிலை, வேப்பிலை என்பன கொண்டு தோரணங்களை கட்டி நிறைகுடம் வைத்து விளக்கேற்றி அம்மனை வரவேற்று வழிபாடு செய்து அம்பாளின் அருளைப் பெறுவர்.

இவ்வாறு அமைக்கப்பட்ட ஒவ்வொருபந்தலிலும் அம்மன் தேர் தரித்து தேங்காய் உடைத்து கும்பம் சரிந்து விபூதி குங்குமம் கொடுத்து பின்பு ஊர்வலம்தொடரும்.

அதேவேளை ஊரில் உளள் பிரதான சந்திகளில் பலர் ஒன்று சேர்ந்து பெரிய பந்தல் இட்டு சோடனை செய்து நிறைகுடம் வைத்து குத்துவிளக்கேற்றி அம்மனை வரவேற்பர்.

இது காலங்காலமாக இருந்து வரும் வழக்கமாகும். இவ்வாறு அம்மன் ஊர்வலம் விடியற்காலையில் அதே வடக்குவாயிலாக கோவிலை அடையும். அம்மன் ஆலயத்தை வந்தடைந்தது காலை பூசை நடைபெறும்.

அன்றைய தினம் காலையில் பெண்கள் கூடி மடிப்பிச்சை நெல், மடைநெல் என்பவற்றில் பொங்கலுக்குரிய நெல்லைக் குற்றுவார்கள்.

அப்போது சிலம்பு கூறல் என்ற இசை பாடல் பாடுவது மரபாகும்.

மதிய பூசையின் பின்னர் ஊர்மக்கள் தங்கள் பானை பால், விறகு என்பவற்றோடு பொங்கலுக்கு ஆயத்தமாவார்கள்.

அம்மனுக்குரிய பொங்கல் பிரத்தியேக பொங்கல் என்பன ஆலயத்தின் உட்பிரகாரத்தில் நடைபெறும். அதேவேளை பக்தர்களும் தத்தமது பொங்கலைப் பொங்கிக் கொண்டிருப்பர்.

ஆலயத்தைச் சூழலுள்ள வெளிவீதி முழுவதிலும் ஆயிரக்கணக்கான பொங்கல் பானைகள் காண்பவர் உள்ளங்களில் பரவசத்தை தோற்றுவிக்கும்.

பொங்கலை படைக்கும்போது பொங்கல் பொங்கியவர்கள் தங்கள் பொங்கல் பானையுடன் வரிசையாக வந்து தமது பானையிலிருந்து குறிப்பிட்ட அளவு பொங்கலை வழங்கிச் செல்வர்.

அதனைத் தொடர்ந்து விநாயகர் பூஜை, அட்டபாலகர் பூஜை, அம்மன் பூஜையும் நடைபெற்ற பின்னர்

“ஒருமாப் பத்தினி வந்தாள்
உலகேழுந் தழைத்திட வந்தாள் வந்தாள்”

என்ற குளிர்த்திப்பாடல் பாடப்படும். அதன் பின்னர் அம்மாளின் புனித நீரான தீர்த்தம் அனைவருக்கும் எறியப்படும்.

இத்தீர்த்தத்தில் நனைந்தால் பாவங்கள் விலகும் என்ற நம்பிக்கையுடன் அத்தீர்த்தத்தில் அனைவரும் நனைவர்.

அதனையடுத்து பணிமாறல் என்ற பாரம்பரிய நடைமுறை நடைபெறும்.

நேர்த்தி காரணமாகவும் வேண்டுதல் காரணமாகவும் பல புடவைகள் வருவது வழக்கம்.

ஒவ்வொரு வருடமும் வரும் புடவைகளை ஒவ்வொன்றாக கப்புகனார் அணிந்து வர அவரை பின்தொடர்ந்து வண்ணக்கர் மடையை சுற்றி வருவார் அப்போது பலர் கூடியிருந்தாலும் அமைதியே அங்கு நிலவி இருக்கும்.

அதை வைத்த கண் இமைக்காமல் அனைவரும் பார்த்துக் கொண்டு இருப்பர். இவ்வைபவம் முடிந்த பின் விபூதி சந்தனம் வணங்கி பின்பு வாட்டா கூறல் வைபவம் நடைபெறும்.

முதல் வட்டாவினை ஊர் வண்ணக்கர் கூறுவார். அவ்வட்டா ஆரம்பக் குடிகளுக்கே சொந்தமாகும்.

அதை எவரும் கைநீட்டி வாங்கமாட்டார்கள். கண்ணகி எங்கெங்கு அமைந்துள்ளதோ
அங்கெல்லாம் இவ் வட்டா உரிமையாகும்.

இதனை ஊர்சுற்றுக் காவியம் வலியுறுத்துகிறது.

இரண்டாவது வட்டா கோவில் வண்ணக்கருக்குரியதாகும். மூன்றாவது வட்டா பழம்பெரும் கோவிலான திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமிகோயில் வண்ணக்கருக்குரியது.

அவர்கள் ஊரின் முதற்குடியான கண்டங்குடி வம்சத்தினர்.

பின்னர் குடுக்கைகள் யாவும் உரிய உரிய பாகைக்காரருக்கும் தொண்டர்களுக்கும் சேர்ப்பித்து எல்லோருக்கும் உபயம் கொடுத்த பின்னர் அன்றிரவு கதவு அடைக்கப்படும்.

பின்னர் வேலைகள் முடிந்தவுடன் சகலரும் கோயில் கப்புகனாரை மேளதாளத்துடன் அவர் வீட்டில் கொண்டு போய்விடுவார்கள். பின் வண்ணக்கரை பாகைக்காரர் எல்லோரும் சேர்ந்து அவர் வீட்டிற்கு கொண்டுசெல்வார்கள்.

அங்கு எல்லோரும் சிற்றுண்டிகள் உண்ட பின் கணக்கு வழக்குகள் பார்ப்பார்கள்.

பின் மூன்றாம் நாள் சடங்குகள் யாவும் பூர்த்தியடையும்.

இந்த ஏழு நாட்களும் நடைபெறும் பூசைகளையும் பராமரிப்பு குடிகளாகிய இரு வம்சத்தவரும் ஆதிகாலம் தொட்டு நடத்தி வந்தார்கள்.

பிற்காலத்தில் இன்னும்சில பாகைகள் சேர்ந்து பதினொரு பாகைகளாக நடைபெறுகின்றது.

இந்த இரு வம்சத்தவரோடு கோரைக்களப்பார், வேடுவர், குருக்கள், விஸவ்கோத்திரம்(பொற்கொல்லர்), முன்னங்கைச்சவடி ஆகியோர் இணைந்து கோயிலைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

தொடரும்…..

முன்னைய பதிவாகிய தம்பிலுவில் கண்ணகி அம்மன் வழிபாட்டு பாரம்பரியமும் அதன் சடங்குமுறைகளும் – பகுதி 5 என்பதனை பார்வையிட இங்கே சொடுக்கவும்.

Share this Article
2 Comments