தம்பிலுவில் கண்ணகி அம்மன் வழிபாட்டு பாரம்பரியமும் அதன் சடங்குமுறைகளும் – பகுதி 8

மட்டுநகர் திவா
மட்டுநகர் திவா
2 Min Read
நேர்த்தி

கண்ணகியம்மன் சடங்குகளில் வெளிப்படுத்தப்படுகின்ற மானுடவியல் அம்சம்.

சடங்கானது வெளிப்படுத்தும் மானுடவியல் அம்சமானது சமூக வாழ்க்கையோடு இணைந்ததாக காணப்படுகிறது அதாவது சமூகத்தின்பல விதமான தேவைகளை அடிப்படையாகக் கொண்டு மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்து சடங்கு முறையில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஆலயபூசைகள் நடைபெறும் ஏழு நாட்களிலும் மக்கள் மிகுந்த பக்தி உணர்வோடு நடந்து கொள்வர்.

நாள்தோறும் கூட்டுப்பிரார்த்தனை வழக்குரைகாவியம் என்பன பாடப்படும். இடைக்கிடையே திருவிழா முடிந்த பின்னர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

ஆலய உற்சவம் தொடங்கி குளிர்த்தி வரையுள்ள காலத்தில் இவ்வூரில் மீன், இறைச்சி,மதுபானம் என்பன விலக்கப்பட்டு புனிதம் பேணப்படும்.

வீதிகள் துப்பரவு செய்யப்பட்டு சோடனைகள் செய்யப்படும். வெளியூரில் வசிக்கும் ஊரை சேர்ந்தவர்கள் ஆலய உற்சவத்தில் கலந்து கொள்வர் இவ்வாறாக இவ்வூர் மக்களின் வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்துள்ள கண்ணகி வழிபாட்டின் முக்கியமானது சர்க்கரைஅமுது என்ற சடங்காகும்.

வருடாவருடம் தமது இல்லங்ளில் தங்கள் குலதெய்வமாக விளங்கிவரும் கண்ணகி அம்மனுக்கு சக்கரை பொங்கல் பூசை செய்து வருவதை இவ்வூர்மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கண்ணகையை தங்கள் இல்லங்களில் பூரண கும்பத்தில் வைத்து வழிபட்டு வந்தால் நோய்நொடிகள் துன்பம் என்பன தங்களை அணுக மாட்டாது என்பது அவர்களது நம்பிக்கையாகும்.

இவ்வூரில் கண்ணகி வழிபாடு சிறப்புற்று வருகிறது என்பதற்கு இந்த சக்கரை அமுது சிறந்த சான்றாகும்.இவ்வாறு இப்பிரதேசத்தில் கண்ணகி வழிபாடு தொன்று தொட்டு நிலவி வருகிறது.

அதேவேளை பழந்தமிழர்களிடையே நிலைத்திருந்த கண்ணகி வழிபாட்டு முறையை ஆராயும்போது அக்காலத்தில் மாரிமழை குறைந்து நெற்பயிர்கள் பாதிப்புறும் வேளையில் அம்மன் ஆலயத்தை திறந்து விசேட பூசைகள் செய்து மழைக்காவியம் பாடப்படுவது வழக்கிலிருந்தது.

அவ்வாறு வழிபட்டபோது வானம் இருண்டுமழை பெய்ததாக கூறப்படுகிறது. மேலும் பயிர் விளைச்சல் கண்டால் கொம்பு விளையாடுவதாக அம்மனை வேண்டி கொம்புநேர்ந்து வைப்பதும் அதனைத் தொடர்ந்து மழை பெய்வதும் கடந்த காலங்களில் நடைபெற்று வந்தன.

அக்காலத்தில் நெல்பயிர்களில் பூச்சித்தாக்கம், பனிநோய்கள் தோன்றும் போது அவ்வூர் மக்கள் கண்ணகி அம்மனை வேண்டி வழிபட்டனர்.

கிருமிநாசினிகள் பாவனைக்கு வராத காலத்தில் அம்மன் ஆலய வீதியில் இருந்து சிறிதளவு மண்ணை எடுத்துக்கொண்டு போய் அம்மனை நினைத்து வயலில் பாதிக்கப்பட்ட இடங்களில் தூவி வந்துள்ளனர் இவ்வாறு செய்தமையால் நோய் மேலும் பரவாமல் தடைப்பட்டதாக கூறப்படுகிறது.

கடும் கோடை நிலவும் வேளைகளில் ஊரில் கண்நோய், தீராததலைவலி, வாய்ப்புண் போன்ற நோய்கள் பரவுவதுண்டு. இவ்வேளையில் அம்மன் ஆலயத்தில் அமைந்துளள் கிணற்றில் நீராடி தங்கள் நோய்களை தீர்த்து வந்துள்ளனர்.

கிணற்றிலிருந்து நீர் எடுத்து சென்று பயிர்களில் தெளித்தால் நோய்களில் இருந்து நீங்கி நல்ல விளைச்சலைத் தரும் என்ற நம்பிக்கை மக்களிடையே இருந்து வந்தது.

சின்னம்மை,பெரியம்மை, கொப்பளிப்பான் போன்ற அம்மை நோய்கள் ஊரில் பரவும் காலங்களில் அம்மன் ஆலய கப்புகனார் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அம்மனை வேண்டி தீர்த்தம் மன்றாடிக் கொடுப்பது.

நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் அருகில் இருந்து பெரியவர்கள் அம்மன் தாலாட்டு பாடுவதும் அவற்றின் பயனாக நோய் குணமடைவதும் இவ்வூர் மக்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி வந்த ஒரு விடயமாக இருந்தது.

தொடரும்…..

முன்னைய பதிவாகிய தம்பிலுவில் கண்ணகி அம்மன் வழிபாட்டு பாரம்பரியமும் அதன் சடங்குமுறைகளும் – பகுதி 7 என்பதனை பார்வையிட இங்கே சொடுக்கவும்.

-மட்டக்களப்பு இணையம்
Share this Article
Leave a comment