செட்டிபாளையம் கண்ணகி அம்மன் / பகுதி 4

மட்டுநகர் திவா
4 Min Read
cpk4

தொடர்ச்சி..

1948 க்கு ஏழு நேரச்சடங்கு நடைபெற்றதாகவும் வெள்ளி இரவு தாயூர் கிரான்குளத்து மக்களின் கதவு திறப்புச் சடங்கும், சனி பகல் குருக்கள்மடம் செட்டிபாளையம் மக்களும், ஞாயிறு பகல் மாங்காடு மக்களும், ஞாயிறு இரவு தேத்தாத்தீவு மக்களும், திங்கள் பகல் மற்றும் திங்கள் இரவுச் சடங்கு களுதாவளை மக்களும் செய்துவருகின்றனர்.

வருடந்தோறும் வைகாசி மாத பூரணை தினத்துக்கு அண்மித்த திங்கட்கிழமையில் அம்மனின் திருக்குளிர்த்தி இருக்கும். இதற்க்கு முந்திய வெள்ளி இரவு (முந்திய காலத்தில் சனி இரவு) கதவு திறத்தல் தாயூர் சடங்குடன் ஆரம்பமாகும். 

இதற்கு வாரத்துக்கு முன்னால் கிரான்குளம் ஸ்ரீ கணபதிப்பிள்ளையார் கோவில் வீதியில் அந் நிர்வாகிகளும் பொது மக்களும் கூடி ஆலோசனை பண்ணுவர். இக் கூட்டத்தில் இதற்க்கு முன் செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் நடந்த பொதுக்கூட்டம் பற்றி கலந்துரையாடுவர்.

இதில் நிதி சேகரித்தல், சடங்கு சாமான் தேடுதல், இரவு கலை நிகழ்ச்சி வைத்தல், கடை கட்டுதல் மற்றும் தோரணம் கட்டுதல் பற்றி ஆராயப்படும். ஸ்ரீ கணபதிப்பிள்ளையார் கோவில் நிர்வாகிகள் தம் மூலம் இக் கிராம மக்களிடம் நிதி சேகரித்து ஊரின்குடியிருப்பு வளவிலும், தோட்டங்களிலும் உள்ள மரங்களில் இளநீர், தேங்காய், வாழைக்குலை, குருத்து, கமுகம்பாளை, மாதுளம்பழம், கரும்பு, பழவகை மற்றும் மரக்கறிவகை என்பவற்றை சேகரித்தெடுப்பர்.

தோரணம் கட்டுபவர்கள், சித்திரைக்கு அரங்கேறிய கூத்து இரண்டாம் களரி வைக்க தயாராகுபவர்கள் என அந்த இடமே சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். தேங்காய் சிலவற்றையும் வாழைக்குலையையும் முன்கூட்டியே கொண்டுபோய் வாழைக்குலை மடுவில் பழுக்க வைப்பர். தேங்காய் அம்மனுக்கு விளக்கு எரிக்க எண்ணை ஊற்றப் பயன்படும்.

கதவு திறப்பதற்கு ஒருவார காலம் முன்பே கூத்தாட இடம் தெரிவர். கம்பாலும், கமுகம் பாளையாலும், கமுகம் சிலாகையாலும் கட்டி நிறக்கடதாசிகளாலும், மின்மினி கடதாசிகளாலும் அலங்கரிக்கப்பட்ட தோரணம் வெள்ளி நண்பகல் வேளைக்கு முன்பே ஆயத்தமாகிவிடும்.

கதவு திறப்புச் சடங்கு இரவுக்கான சாப்பாடுகளும் தலைமை வண்ணக்கரின் வீட்டில் சமைக்கப்படும். 

பறைமேளம் ஒலிக்கப்படும், வெள்ளிக்கிழமை நிழல் குளிர்ந்த நேரம் தேடிய பொருட்களையெல்லாம் வண்டியில் ஏற்றி அம்பிளாந்துறை மூப்பனார் தலைமையில் உள்ள பறைமேள தாளத்துடன் கும்மி, வசந்தன் கூத்து, தீப்பந்தமிடல் என அலங்காரத் தோரணம் ஸ்ரீ கணபதிப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு ஆடிப்படியடித்து வழியில் இடையில் உள்ள ஆலயங்களை தரிசித்து வணங்கி செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலய வீதியை வந்தடையும். வழியெங்கும் அரோகரா சத்தமும், வசந்தன் கூத்து கும்மிப் பாடல்களுமாக மக்கள் எழுப்பும் ஓசை வானைப் பிளக்கும்.

கோயில் வாசலில் அம்மன் கோவில் கட்டியார் கொண்டுவந்த பொருட்களும் மக்களும் புனித நீர் தெளித்து வரவேற்கப்படுவர். பின்னர் பூசை பொருட்களுடன் கோயில் திறப்பையும் திட்டத்தில் வைத்து பயபக்தியுடன் வெளிப்பூசை செய்வர்.

கிரான்குள மக்கள் கதவு திறக்காவிடின் அம்மன் கதவு திறக்காது என்றும் அம்மன் சம்மதம் கிடைக்கவில்லை, கோபம் கொண்டுள்ளார் எனவும் மக்களிடையே ஒரு ஐதீகம் உள்ளது. அம்மன் கதவு திறப்படாது இருந்த போது “ஏழு தடவை முழுகி ஏழு மாத்து உடுத்து வந்து கதவு திறந்தபோது” தான்  திறபட்டதாகப் பேசப்படுகிறது. இது தாயூரவர்களின் கதவு திறப்பு சடங்கு எனவும் அழைக்கப்படும்.

 1927 இல் செட்டிபாளையம் கண்ணகி அம்மன் கட்டடவேலை புணருத்தாரணக் காலங்களிலும் 1947 இல் வெண்கலச்சிலை (செலவு 101ரூபாய்) வைத்து கும்பாபிஷேகம் செய்த காலத்திலும் அதற்க்கு முன்புகளும் கண்ணகி அம்மன் சிலை கிரான்குளக் கோயிலில் கொண்டு வைத்துவிட்டு ஆலயத்திருத்தங்கள் நடந்ததாகவும் பெரியவர்கள் கூறுவார்கள். 

கண்ணகி அம்மன் வழிபாட்டோடு வசந்தன் கும்மி, கரகாட்டம் , கொம்பு முறித்தல், காவியம் பாடுதல், வழக்குரை படித்தல் என்பன இரண்டறக்கலந்த நிகழ்ச்சிகள். கிராமத்தில் அம்மன் நோய், வாந்திபேதி, கண் நோய் என்பன ஏற்படும் காலங்களில் வீடுகளிலும், கிராமத்து வீதிக்கு வீதி சந்தி தோறும் இராக்காலங்களில் பாடி ஆடுதல் அண்மைக்காலம் வரை நடைபெற்று வந்த நிகழ்ச்சிகளாகும். இதில் கொம்பு விளையாட்டு ஆரம்பத்தில் நீண்ட காலமாக கிரான்குளத்திலிருந்து கைவிடப்பட்டுள்ளது.

தாய்வழியாக குடி என்று அழைப்பது போல, தந்தை வழியாக சேரி என்று அழைக்கப்பட்டது. இது வடசேரி, தென்சேரி என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு சேரிக்கும் தலைமை தாங்க ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். கொம்பு விளையாட்டு விளையாடப்படும் இடம் கணபதிப்பிள்ளையார் ஆலய முன்றலை அடுத்துள்ள பெருந்தெருவிலாகும்.

இதில் வில்லியடித்தெரு, கொட்டமாவடித்தெரு என பெயர் மங்கி மறையத் தொடங்குகிறது. வில்லியடித்தெருவில் ஆரம்பத்தில் தென்சேரி தோரணம் கட்டப்படும். வடசேரி ஆரம்பத்தில் வடசேரி தோரணம் கட்டப்படும்.

அக்காலத்தில் படுவான்கரைக்கு  (சூரியன் மறையும் மட்டக்களப்பு வாவிக்கு அப்பால் உள்ள மேற்கு பிரதேசம்) சென்று கம்பு கொடி வெட்டிவருவதாக இருந்தால் எவ்வளவு பெரிய தோரணமாக இருக்க வேண்டும் என எண்ணிப்பார்க்கலாம்.

கமுகு, சிலாகை ஊரில் வெட்டப்படும். மின்மினி தாள்களால் அலங்கரிப்பு செய்து திறப்பு விழா நடைபெறும். இக் காலத்தில் சந்தோச மிகுதியால் பிள்ளையார் தூக்கி ஆடுதல், குதிரையாட்டம், பொய்க்கால் ஆட்டம் என்பனவும் தாள ஓசைக்கு ஏற்ப ஆடப்படும்.

போர்த்தேங்காய் அடித்தல், கொம்பு விளையாட்டு முடிந்ததும் போட்டியாக செயற்பட்ட வடசேரி, தென்சேரி மக்களும் ஒற்றுமையாக வழிபாடாற்றி பொங்கல் பூசை செய்வர்.

பகுதி 5 தொடரும்….

-மட்டுநகர் திவா
Share this Article
Leave a comment