செட்டிபாளையம் கண்ணகி அம்மன் / பகுதி 5

மட்டுநகர் திவா
4 Min Read

தொடர்ச்சி…

கொம்பு விளையாட்டு காலத்தில் கிராமத்தில் கலகலப்பு, சந்தோசம், உற்சாகம் என்பன ஒரு மாத காலத்துக்கு மேலாக நீடித்தாலும் இக் காலத்தில் ஒருவருக்கொருவர் போட்டி பிரச்சனைகள் ஏற்பட்டு உள்வீட்டுக்குளே கணவன் மனைவி பிரச்சினையாகவும் எழத்தலைப்பட்டுவிட்டன.

இதன் காரணமாக கொம்பு விளையாட்டினை கைவிடலாகினர். 

அம்மை நோய், வாந்திபேதி, சீதபேதி, கண்நோய் நீங்க ஒற்றுமையான நிகழ்ச்சிகளை நடத்த முற்பட்டனர்.

“மாரியம்மன்” சடங்கு செய்ய தொடங்கியது கொம்பு விளையாட்டு விளையாடாமல் விட்ட பிறகே என அறிய முடிகிறது.

கதவு திறத்தல் சடங்குடன் ஆலயத்தை வந்தடையும் அம்பிளாந்துறை பறைமேள மூப்பன் கூட்டத்தினர் குளிர்த்தி முடியும் வரை சேவையாற்றுவர்.

கண்ணகி அம்மன் கதவு திறக்கும் வெள்ளிக்கிழமையில் இருந்து குளிர்த்தி நிறைவுற்ற அன்றைய பகல் பொழுதாகிய செவ்வாய் கிழமை வரை கிராமத்தில் மச்ச மாமிசம் எடுக்க மாட்டார்கள்.

வீடு வளவு தெரு சகலதும் கூட்டி துப்பரவு செய்யப்படும்.

இக் காலத்தில் மஞ்சள் இடிப்பதோ, மா இடிப்பதோ, முந்திரியம் பருப்பு சுட்டுத் தட்டுவது, பலகாரவகை சுடுவது தவிர்த்து அம்மனுக்கு அமைதியான வழிபாடு நடக்கும். 

கலியாணச்சடங்கு

ஞாயிறு பகல் மங்களகரமான பக்தி மிக்க கலியாணச்சடங்கு நடைபெறும். கலியாணச்சடங்கு அழகான சரிகை சேலைகளால் அலங்கரிக்கப்பட்டு பெண் போல உருவமைக்கப்படும்.

கரப்பு உடுப்பு முறையில் மடிப்பு மடிப்பாக அமைக்கப்படும். பார்க்கவே மிகவும் அழகாகவும் பயபக்தியாகவும் இருக்கும். 

கலியாணகாலுக்கு முன்பாக ஐந்து பூரண கும்பங்களும் வைக்கப்படும். இக் கும்பங்களை சுற்றி நூற்றுக்கணக்கான மடைகள் வைக்கப்படும்.

இம் மடைகளைப் பார்க்கும் போதே கண்ணகி அம்மனை நேரடியாக பார்த்த போன்றதொரு பிரம்மை உண்டாக்கிவிடும்.

இதற்கு மேலதிகமாக மேடையில் இருக்கும் தாமரை மலரும், கமுகம் பாளையும் இணைந்து வீசும் நறுமணம் அனைவரையும் மெய்மறக்கச் செய்யும்.

பூரண கும்பம் வைக்கப்படும் போது கட்டியார் உருக்கொண்டு நடுங்கிய நிலைக்குள்ளாகி விடுவார்.

தன்னிலை மறந்தவராக தென்படினும் ஒழுங்குற, நெறிமுறை வழுவாது பூசை ஆசாரங்களை செய்து நிற்பதும் பெரும் அற்புதம் என்றே சொல்ல வேண்டும்.

இவ் வேளையில் வெண்கலத்தால் அழகுறச்செதுக்கிய உடுக்கு கட்டியாரினால் இசைக்கப்படும்.

இதன் ஓசை பல தீராத நோய்களையும் தீர்க்கும் என்பது நம்பிக்கை. இவ் உடுக்கு வருடத்தில் 3 முறை மட்டுமே ஒலிக்கப்படும்.

மடிப்பிச்சை

பெண்களில் சிறுமியர், மங்கையர், மாதர்கள், வயோதிபர்கள் என்றில்லாது யாவரும் உடுத்த சேலையிலேயே மடி கொய்து  அதில் தங்கள் வீட்டில் இருந்து கொஞ்சம் நெல்லையும் பத்திரத்தையும் போட்டெடுத்து வீடு வீடாகச் செல்வர்.

“கண்ணகி அம்மன் பெயராலே மடிப்பிச்சை தாருங்கள் ” எனக் கேட்டு ஒவ்வொரு வீட்டிலும் போடும் நெல்லை வாங்கிக்கொண்டு, வெறும் காலோடு கிரான்குளத்தில் இருந்து கண்ணகி அம்மன் கோவில் வரை சென்று தாம் எடுத்து வந்த மடிப்பிச்சையை கொடுத்து வணங்கி வருவர்.

இம் மகளிர் கையிலும், தலையிலும், மடியிலும் வேப்பிலை ஏந்தி வீதி வழியே செல்வதுஅம்மனே வீதியுலா வருவது போன்ற பக்த்தியுணர்வை உண்டாகும்.

இறுதியில்  சிறுதுளி பெருவெள்ளம் போல அம்மன் வாசலில் நெல் மலை ஒன்று குவிந்திருக்கும். 

குளிர்த்திச்சசடங்கு

குளிர்த்திச்சசடங்கு மிக விசேடமானது. இதனை செய்வதில் ஏற்படும் செலவும் மற்றைய சடங்குகளை விட அதிகமானது.

ஆலயத்தினை அலங்கரித்தல், கலை நிகழ்ச்சி ஒழுங்கு போன்ற அனைத்தையும் செய்து முடிக்க வேண்டிய பொறுப்பு அன்றைய சடங்கு உரிமையாளருக்கு உண்டு.

ஏனைய ஊரவர்களும் வணக்கர்களுமாக தமது பரிபூரண ஒத்துழைப்பினை வழங்குவர்.

குளிர்த்திச்சடங்கின் இறுதியில் குளிர்த்தி கண்டு பணக்கம் எனப்படும் தீர்த்தம் பெறுவதற்கு கூடியிருக்கும் அடியார்களுக்கு கண்ணகி வழக்குரை ஏடு படிக்கப்படும். 

குளிர்த்திச்சடங்கில் “விநாயகர்பானை” விசேட மதிப்புடையது ஒரு மரைக்கால் அரிசி பொங்கக்கூடிய 3 மட்பானைகள் சித்திர வேலைப்பாடுகளுடன் குயவனிடம் முற்கூட்டியே சொல்லி செய்வித்தேடுக்கப்படும்.

மடிப்பிச்சையாக வந்த நெல்லை குற்றி அரிசியாக்கி மூன்று பானைகளிலும் இட்டு பொங்கி முடிக்கும் பொறுப்பு கட்டியாரையே சாரும்.

பால் பொங்கி வரும்பொது கட்டியார் அதனை பயபக்த்தியோடு அள்ளி மூலஸ்தானத்தில் இருக்கும் அம்மனின் முந்தானை சீலை மேடையிலேயே பக்குவமாக வைப்பார்.

திருக்குளிர்த்தி ஆட வேண்டிய வேளை திங்கட்கிழமை பின்னிரவாகும். செவ்வாய்க்கிழமை விடிவதற்கு முன்னர் திருகுளிர்த்தி முடிந்துவிட வேண்டும்.

கொக்கு குருவி பூமியில் விழுவதற்கு முன்னே குளிர்த்தி ஆடவேண்டும்” அதிகாலை 4 மணிக்கு குளிர்த்தி இடம்பெறுவது பொருத்தமானது.

குளிர்த்தி ஆடவேண்டிய நேரம் வந்ததும் குளிர்த்தி மண்டபம் கழுவிச் சுத்தமாக்கப்படும். பின் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்படும்.

பூசி மினுக்கி பொட்டிட்டு கொண்டுவரும் சருகப்பனையை கட்டியார் பயபக்த்தியுடன் உரிய இடத்தில் தூக்கி வைப்பார். 

குளிர்த்தி பானைக்கான விசேட தீபாராதனைகள் முடிவுற்றதும் குளிர்த்தி ஆடுவதற்கு அம்மனை எழுந்தருளப்பண்ண ஆயத்தமாவார்கள்.

16 முழம் நீளமான வெள்ளைச் சேலையும் அழகிய பட்டுச்சேலையினால் தலைப்பாவும் உடம்பெல்லாம் மஞ்சளுமாக கட்டியார் அம்மனை போன்றே காணப்படுவார்.

பின்னிரவு 3.30 மணியளவில் குளிர்த்திப்பாணைக்கு தீபாராதனை நடைபெறும் அம்மாளுடைய மங்களப்பொருட்களான சிலம்பு, அம்மனைக்காய், வெண்கலச்சங்கு என்பவற்றை குளிர்த்திப்பானைக்குள் போட்டு பின்னர் குளிர்த்தி ஏடு படிக்க ஆயத்தமாவர்.

பெரிய குத்துவிளக்கின் அருகே இருந்து குளிர்த்தி ஏட்டில் உள்ள பாடல்கள் பாடி முடிந்ததும் பானையில் இட்ட புனிதப்பொருட்களை எடுத்துக்கொண்டு அம்மனை மூலஸ்தானத்துள் கொண்டு போய் விடுவார்கள்.

பானையில் இருக்கும் தீர்த்தம் வந்திருக்கும் பக்தர்களுக்கு பகிரப்படும். இறுதி நிகழ்வாக முட்டி கூறுதல் இடம்பெற்று சடங்கானது இனிதே நிறைவு பெறும்.

தொன்மை

செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலயம் பழைமையானது என்பதை நிரூபிக்க 1816ம் ஆண்டு 2916 ஆம் இலக்கத்தில் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் “ஜேம்ஸ் மக்னெட்” எனும் நீதிபதி முன்னிலையில் செட்டிபாளையம் கண்ணகி அம்மன் கோவில் பூசகருக்கு எதிராக வண்ணக்கர் “முனைக்குட்டி-இருபத்தஞ்சாப்போடி” வழக்கு ஒன்றை வைத்துள்ளார்.

இதிலிருந்தே 200 வருடத்துக்கும் மேற்பட்ட ஆலய வரலாற்றினை எம்மால் உணர முடியும்.

கண்ணகி அம்மன் திருவருளால் அனைவரும் நோய்நொடிகள் இன்றி இன்புற்று வாழ வாழ்த்தி பிராத்தித்து, வாசகர்களுக்கு  நன்றி கூறி கட்டுரையை முடிக்கிறேன்.

தெய்வம் தொழா அள் கொழுநற் றொழுவாளைத்
தெய்வம் தொழுந்தகைமை திண்ணிதால் – தெய்வமாய்
மண்ணக மாதர் கணியாய கண்ணகி
விண்ணக மாதர்க்கு விருந்து.

முற்றும்.

மட்டுநகர் திவா

Share this Article
Leave a comment