மரபுவழி மரணகிரியைகள்:7

மட்டுநகர் திவா
மட்டுநகர் திவா
4 Min Read
mutkuka kulaththarin marana sadankukal mattakkalappu.com part 7

செய்ய வேண்டியவை

  • பிரேதப் பெட்டியை தூக்கும் போது தென்னாடுடைய சிவனே போற்றி! என்று சொல்லியபடியே தூக்க வேண்டும் அல்லது கோவிந்தா! கோவிந்தா! என்று சொல்லியபடியே தூக்க வேண்டும்.
  • தலை தெற்குப் பார்த்தபடியுள்ள உடலைக் கொண்டு செல்லும் போது வீட்டை பார்த்தபடி தலை இருக்க வேண்டும்.
  • பெட்டியை மெதுவாக வாசலில் நிறுத்தப்பட்டுள்ள பிரேத வண்டிக்கு கொண்டு செல்ல வேண்டும்.
  • அப்போது தலைப் பக்கம் முன் பக்கம் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • பிரேத வண்டி புறப்படும் போது, அதில் கொள்ளி வைக்கும் கர்த்தா (உரிமை உடையவர்) கொள்ளிச் சட்டியை கையில் பிடித்தவாறு வண்டியில் முன் பக்கம் அமர்ந்து கொள்ள வேண்டும்.
  • இன்னொருவர் பொரி, கடுகு, எள் ஆகிய மூன்றையும் ஒரு கலத்தில் இட்டு கையில் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக வழியில் ஆங்காங்கே இடுகாடு செல்லும் வரை இறைத்துக் கொண்டு செல்ல வேண்டும்.
  • பொரி அமங்களத்தைக் குறிக்கும். கடுகு மாந்திரீக நம்பிக்கை படி பேய் பிசாசுகளைத் தடை செய்யும், எள் சிற்றுயிர்களுக்கு உணவாக அமைகிறது.
  • இறப்பு வீட்டில் சமைக்க இயலாது இருக்கும், ஆதலால் உறவினர்கள் இரண்டெரு நாட்களுக்கு உணவு சமைத்துக் கொண்டு வருதல் வேண்டும். அது அவசியமாகும்.
  • மூன்றாம் நாள் முதல் வீட்டில் சமைக்க தொடங்கலாம்.
  • வீடு திரும்புவோர் இறப்பு நடந்த வீட்டாரிடம் “போய் வருகிறேன்”, என்று சொல்லாமல் செல்ல வேண்டும்.
  • “போய் வருகிறேன்” என்றால் மறுபடியும் துக்கம் விசாரிக்க வருகிறேன், என்பதாக அர்த்தப்படும் என்பதால் அப்படிச் சொல்லக் கூடாது என்பது கருத்து.

இடுகாட்டுக்குக் கிரியைகள்

  • பிரேதப் பெட்டியை மெதுவாக பாடையிலிருந்து வெளியே எடுக்க வேண்டும்.
  • கால் பாகம் சுடலையை பார்க்கும் விதத்தில் தூக்கிச் செல்ல வேண்டும்.
  • சுடலையில் அமைக்கப்பட்டுள்ள பீடத்தின் மேல் பெட்டியை வைக்கும் முன், அதன் இடப்புறமாக மூன்று முறை சுற்றி வர வேண்டும்.
  • அப்படி சுற்றி வந்து உடலின் தலை புறம் தெற்கு நோக்கி இருக்கும் படி முதலில் தலைப் பகுதியை வைக்க வேண்டும்.
  • பெட்டியின் மூடி திறக்கப்பட்ட பிறகு வாய்க்கரிசி இடும் சடங்கு நடைபெறும்.
  • வாய்க்கரிசி இடுவதற்கு தோதாக இடுகாட்டுக் காவலர் பிரேதப் பெட்டியின் முன் பக்கம் ஒரு துணியை விரித்து வைப்பார்.
  • சுடலைக்கு வந்துள்ள உறவினர்களும் விரும்பியவர்களும் உடலின் இடப்புறமாக தலைப் பக்கம் வந்து வாய்க்கரிசி விட்டுச் செல்ல வேண்டும்.
  • பெட்டியின் கால் பக்கத்தில் இளநீர், தேங்காய், பழம், ஊதுபத்தி, வெற்றிலை, பாக்கு முதலிய வைக்கப்பட வேண்டும் சூடமும் இருக்க வேண்டும்.
  • அனைவரும் வாய்க்கரிசி இட்ட பிறகு கொள்ளி வைப்பவர் வாய்க்கரிசி இட வேண்டும்.
  • பின் கொள்ளி வைப்பவர், தேங்காய் உடைத்து தூபதீபம் காட்டி வணங்க வேண்டும்.
  • தூபதீபம் காட்டும் போது பஞ்சபுராணம் ஓதி, ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்க வேண்டும் பின் உடலின் கால் பாதத்தில் விழுந்து வணங்க வேண்டும்.
  • உடலில் உள்ள நகைகளை கழட்டி முக்கியமானவர்களிடம் கொடுத்து பின் பெட்டி மூடப்பட வேண்டும்.
  • பூசை முடித்த பிறகு உறவினர் ஒருவர் அல்லது இடுகாட்டு தொழிலாளி, நீர் நிரம்பிய குடத்தை எடுத்து கொள்ளி வைக்கும் உரிமை உடையவரின், (தந்தைக்கு தலைப்பிள்ளை தாய்க்கு கடைசிப் பிள்ளை) இடத் தோளில் வைத்து, வலக்கையில் தந்து, அதனை பின் புறமாக பிடித்துக் கொள்ளச் செய்து, பிரேதத்தை தலைப் பக்கமிருந்து இடப் புறமாகச் சுற்றி வரச் செய்வார்.
  • சுற்றி வரும் போது, முதல் சுற்றில் பின்னால் செல்பவர் தம் கையிலுள்ள வெட்டுக் கத்தியால், பானையை கொத்தி ஓட்டையாக்கி நீர் வழிய செய்வார்.
  • அதை பின் வருபவா் புற விரல்களால் பிரேதத்தின் மீது படும் படி செய்து சொர்க்கம் சேர், சொர்க்கம் சேர் என்னச் சொல்வார்.
  • மூன்று சுற்றுக்கள் வரும் வரை இதே போல் நடைபெறும்.
  • மூன்றாம் முறை சுற்றி வந்து பிரேதத்தின் தலைப்பாகம் வந்த பிறகு தெற்கு பக்கம் பார்த்து நிற்க வேண்டும்.
  • அப்போது அவருக்குப் பின்னால் பிரேதத்தின் தலைப்பாகம் இருக்கும்.
  • அவா் தம் வலக் காலைச் சுற்றி மடித்து மண்டியிட்டு அமர்ந்த நிலையில் கொல்லியை பின்புறமாக நீட்டிப் பிரேதத்தின் தலையில் செருகி விட வேண்டும்.
  • கொள்ளியை செருகியவுடன் தம் இடத் தோளில் உள்ள இடத்தை அப்படியே தமக்கு முன்னால் கீழே போட்டு உடைத்து விட வேண்டும்.
  • கொள்ளி வைத்தவர் இறுதி வரை இடுகாட்டில் இருக்க வேண்டியதில்லை.
  • குடம் உடைந்த பிறகு அவரை இரண்டெருவர் வீட்டுக்கு அழைத்து வந்து விட வேண்டும்.
  • வீட்டின் வாசற்படிக்கு முன்னால் ஓர் உலக்கை போட்டிருக்க வேண்டும். அதை கடந்தே வீட்டில் புக வேண்டும்.
  • நுழைய முன் வேப்பிலை ஒன்றை கடித்துத் துப்ப வேண்டும்.
  • இறைவனை நினைத்து திருநீறு அணிந்து கொள்ள வேண்டும்.
  • மற்றவர்களும் குளித்து விட்டு வந்து திருநீறு அணிந்து கொள்ள வேண்டும்.

தொடரும்…

ஜீவசங்கரி

கட்டுரை தொடற்சியை வருகின்ற நாட்களிலும் எதிர்பார்க்கலாம். திருத்தங்கள் பின்னூட்டங்கள் இருப்பின் தெரிவிக்கத் தயங்க வேண்டாம்.
ஏனெனில் மரபு வழி மரணகிரியை முறைகள் நாளுக்கு நாள் எமது பகுதியில் அழிந்து கொண்டு வருவதை அனைவரும் உணர்ந்திருப்பீர்களென நம்புகிறேன். தொடர்புகளுக்கு mattuweb@gmail.com எனும் மின்னஞ்சலை பயன்படுத்தவும்.
அல்லது mattakalappu.com எனும் முகப்புத்தகத்தில் தொடரவும்.
-மட்டுநகர்_ திவா

-மட்டக்களப்பு இணையம்

Share this Article
6 Comments