8 வது நாள்
- எட்டாம் துக்கம் என்பது இறந்தவர்களின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளாதவர்கள் கலந்து கொள்ள உதவும் நாளாக கொள்ள வேண்டும்.
- எட்டாம் தூக்கம் என்பது உயிர்விட்ட நாளிலிருந்து கணக்கிட்டால் வரும் ஏழாம் நாள் இரவாகும்.
- படையல் இடுவது இதில் பிரதான அம்சமானதால், வீட்டில் உணவு பலகாரம் முதலியன தயாரிக்க வேண்டும்.
- உறவினர்கள் தங்கள் வீட்டில் செய்த பலகாரங்களை கொண்டு வந்து தர வேண்டும்.
- இரவு உடல் கிடத்தப்பட்டிருந்த இடத்தில் ஒரு பீடத்தை வைத்து அதில் இறந்தவர் படத்தை வைத்து மாலையிட்டு உணவு, பலகாரங்கள், பழங்கள் முதலியன படைத்து தூபதீபம் காட்ட வேண்டும்.
- உறவினர்களுன் அமர்ந்து திருமுறைகளை ஓத வேண்டும். இது கூட்டு வழிபாடாக அமையும்.
- பிறகு அனைவரும் உணவு உண்ணலாம்
16வது அல்லது 31வது நாள்
- ஒருவர் இறந்த நாளிலிருந்து 16ஆம் நாள் அல்லது 31ஆம் நாள் செய்யும் சடங்கு பதினாறாம் நாள் துக்கம் அல்லது முப்பத்தொராம் நாள் துக்கம் எனப்படும்.
- இறந்த நாளிலிருந்து பதினைந்தாவது அல்லது முப்பதாவது நாள் இரவு இதுவாகும்.
- இந்த 16ஆம் நாள் அல்லது 31ஆம் நாள் செய்யும் சடங்கு கருமாதி என்று சொல்லப்படுகிறது.
- இல்லத்தை தூய்மை செய்து உணவு வகைகளையும் பலகாரங்களையும் செய்தல் வேண்டும்.
- உறவினர்கள் உதவிக்காக தங்கள் வீட்டில் பலகாரங்களை செய்து கொண்டு வருவது வழக்கம்.
- இரவு சுமார் ஏழு முப்பது மணிக்குள் தலை வாழை இலை, இட்டு இறந்தவர் வீட்டில் செய்த உணவு வகைகளுடன் உறவினர்கள் கொண்டு வந்த உணவு வகைகளில் சிலவற்றை படையலில் வைக்க வேண்டும்.
மோட்ச தீப சட்டி
- அரிசி மா அரை கிலோ அளவு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து பந்தைப் போல் உருட்டிக் கொண்டு வெள்ளைத் துண்டுத் துணியில் வைத்து மேற்பாகத்தில் அமையுமாறு கம்பியால் கட்டிக் கொள்ள வேண்டும்.
- வாய் அகன்ற சட்டியை கழுவி சமயச் சின்னங்கள் இட்டு, திரியிட்டு, கட்டிய அரிசி மாவு உருண்டையை சட்டியில் வைக்க வேண்டும்.
தீப வழிபாடு
- மோட்ச தீப சட்டியில் மாவில் கட்டப்பட்ட திரித் துணியை வைத்து அதனுள் நெய்யை ஊற்றச் செய்ய வேண்டும்.
- பற்றாக் குறையாக இருந்தால் தேங்காய் எண்ணையையும் ஊற்றலாம் இரண்டு, மூன்று சூடத்தை பொடியாக்கிப் திரியின் நுனியில் வைக்க வேண்டும்.
- கொள்ளி வைத்தவரை அழைத்து, தேங்காய் உடைத்து வைத்து தூபதீபம் காட்டி ஒரு வில்லை சூடத்தை திரியின் மேல் கொளுத்தி வைத்து பக்கத்தில் உள்ள சிறிய கரண்டியினால் சட்டியில் உள்ள நெய்யில் சிறிதளவு எடுத்து மும்முறை திரியில் இட வேண்டும்.
- உறவினர்கள் தூபதீபம் காட்டி நெய் வார்த்து மலர் தூவி வணங்கி திருநீறு இட்டுக் கொள்ள வேண்டும்.
- இவ் வேளையில் முதல் படையல் வழிபாடு முடியும், ஆனால் மோட்ச தீபம் தொடர்ந்து எரிய வேண்டும்.
- அன்று முதலில் படையலிட்டு உணவு வகைகள் மட்டும் வைத்து பூஜை செய்தல் வேண்டும்.
- இது முடிந்து அனைவரும் உணவருந்தலாம்.
- இரண்டாம் முறை படையல் இடுவது நள்ளிரவு 12 மணியளவில், அப்போது பழ வகைகள் மட்டும் வைத்துப் பூஜை செய்ய வேண்டும்.
- அனைவரும் அமர்ந்து திருமுறைகளைப் பாடிய பின் மீண்டும் தூபதீபம் காட்டி, திருநீறு வழங்க வேண்டும்.
- பின்னர் படையல் பழங்களை அங்குள்ளவர்களுக்கு உண்ணக் கொடுக்கலாம்.
- மூன்றாவது முறை பட்டியலிடுவது அதிகாலை நான்கு மணி போல நடைபெறும்.
- அப்போது அகத்திக்கீரை, தட்டைப்பயறு கலந்த சோறும் படைக்கப்படும். உப்புக் போட மாட்டார்கள்.
- அகத்திக்கீரையை தனியாக அவித்துப் படையலில் வைப்பதும் வழக்கம்.
- தீபம் காட்டி மலா் தூவி வணங்க வேண்டும்.
- பூஜை முடிந்த பின்பும் படையலில் உள்ளவற்றை அப்படியே ஒரு வெள்ளைத் துணியில் சேர்த்துக் கட்டி கொள்ளி வைத்தவர் எடுத்துக் கொண்டு நீர் நிலை உள்ள இடம் செல்ல வேண்டும். (ஆறு அல்லது கடல்)
- அங்கு ஓரிடத்தில் கொண்டு சென்றவற்றை வைத்து பழம், தேங்காய், வெற்றிலை, பாக்கு போன்றவற்றை வைத்து தேங்காய் உடைத்து தூப தீபம் காட்டி வணங்க வேண்டும்.
- பிறகு கொள்ளி வைத்தவர் மோட்ச தீப விளக்கு, படையல் முதலியவற்றை எடுத்துச் சென்று ஓடும் நீரில் வடக்கு பக்கமாக நின்று விட்டு விட்டு, பின் முழுகி விட்டு கரைக்கு வர வேண்டும்.
- பிறகு வீடு திரும்ப வேண்டும்.
தொடரும்…
- ஜீவசங்கரி
கட்டுரை தொடற்சியை வருகின்ற நாட்களிலும் எதிர்பார்க்கலாம். திருத்தங்கள் பின்னூட்டங்கள் இருப்பின் தெரிவிக்கத் தயங்க வேண்டாம்.
ஏனெனில் மரபு வழி மரணகிரியை முறைகள் நாளுக்கு நாள் எமது பகுதியில் அழிந்து கொண்டு வருவதை அனைவரும் உணர்ந்திருப்பீர்களென நம்புகிறேன். தொடர்புகளுக்கு mattuweb@gmail.com எனும் மின்னஞ்சலை பயன்படுத்தவும்.
அல்லது mattakalappu.com எனும் முகப்புத்தகத்தில் தொடரவும்.
-மட்டுநகர்_ திவா
- மரபுவழி மரணகிரியைகள் பதிவுகளின் தொகுப்பு
-மட்டக்களப்பு இணையம்


