மரபுவழி மரணகிரியைகள்:11

மட்டுநகர் திவா
மட்டுநகர் திவா
3 Min Read
mutkuka kulaththarin marana sadankukal mattakkalappu.com part 11

திதி நாள்

  • பிறந்த ஒரு குழந்தைக்கு பிறந்த நட்சத்திரம் பார்க்கப்படுகிறது, ஆனால் இறந்தவருக்கு திதி பார்க்கப்படுகிறது.
  • ஒருவர் இறந்த நேரம் என்ன திதியோ அதை ஒவ்வொரு மாதமும் அவரின் ஆன்மா சாந்திக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வதே மாசியம் எனப்படும்.
  • அடுத்து வரும் முதல் ஒரு வருடம் வரை மாதா மாதம் இறந்த திதியில் செய்தால் மாசிய சிரார்த்தம் ஆகும்.

ஆண்டு திவசம்

  • ஒருவர் இறந்து போன நாள் மறு ஆண்டில் வரும் ஓராண்டு நிறைவே திதி அல்லது திவசம் என்று கூறுவார்கள்.இதைச் சிராத்தம் என்றும் கூறுவார்கள்.
  • இறந்து போனவர்களுக்காக சிரத்தையுடன் செய்யும் கிரிகைக்கு சிரார்த்தம் என்ற பெயர்.
  • இறந்தவர்களின் ஆன்மா நற்கதி அடைய வேண்டி பிள்ளைகள் செய்யும் ஆண்டு வழிபாடு சிரார்த்தம், அன்று உறவினர்களும் நண்பர்களும் ஒன்று கூடி அவர் ஆன்மா சாந்தி பெற பிரார்த்தனை நடத்தி விட்டு இயன்ற அளவிற்கு அன்னதானம் செய்யலாம், அன்று ஆலயத்திற்குச் சென்று மோட்ச தீபம் ஏற்றுவது உத்தமம்.

விரதங்கள்

  • தந்தையை அல்லது கணவனை இழந்தோர் முதலாண்டு திவசத்தின் பின் வரும் ஒவ்வொரு அமாவாசை திதியிலும் விரதம் கடைபிடிப்பது மிகவும் நல்லது.
  • தாயை அல்லது மனைவியை இழந்தோர் முதல் ஆண்டு தீவகத்தின் பின் வரும் ஒவ்வொரு பௌர்ணமியிலும் விரதம் கடைபிடிப்பது மிகவும் நல்லது.
  • அன்று காலையில் உபவாசம் இருந்து மாலையில் ஆலய தரிசனம் செய்து இறந்தவரின் ஆத்ம சேமத்தின் பொருட்டு இறைவனை வேண்டி ஆசாரமாகச் சைவ உணவு உட்கொண்டு இரவில் விரதத்தை பூர்த்தி செய்யலாம்.
  • வசதியற்றவர்கள் ஆடி மாதத்தில் வரும் அமாவாசையிலும், சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமியிலும் முக்கியமாக கொண்டு விரதமிருந்து சிரார்த்தம் செய்வதும் உண்டு.

அவிட்ட பஞ்சமியில் இறந்தால்…

  • அவிட்டத்துடன் தொடங்கும் ஐந்து நட்சத்திரங்களை அவிட்ட பஞ்சகம் அல்லது கனிஷ்ட பஞ்சகம் என்பா்.
  • அவை அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி இவ்வைந்து நட்சத்திரங்களில் ஒன்றில் ஒருவரின் ஆன்மா பிரிந்தால் அவிட்ட பஞ்சமியில் இறந்தார் என்பர்.
  • அவிட்டத்திற்கு 6 மாதமும், சதயத்திற்கு மூன்று மாதமும், பூரட்டாதிக்கு ஒரு மாதமும், உத்தரட்டாதி ஒரு மாதமும், ரேவதிக்கு 15 நாட்களும் தோசை காலமாகும்.
  • இக்கால தோஷம் நீங்க, சாந்தி பூஜை செய்வது மிக முக்கியமாகும்.
  • இதைத் தவிர்த்து கேட்டை மகம் போன்ற நட்சத்திரங்களில் உயிர் துறந்தால் குடும்பத்திற்கு தோஷம் உண்டாகும்.

கொள்ளிக் குடம் உடைப்பது ஏன்?

  • இறைவனானவன் உயிர் எடுத்து மனிதர்கள் அனைவருக்கும் வேறுபாடின்றி நிறைகுடமாக அறிவையும் ஆற்றலையும் ஆன்மாவையும் தருகின்றான்.
  • ஆனால் மனிதனானவன் வயது முதிர முதிர பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை என்னும் மூன்று ஆசைகளின் வயப்பட்டு தன்னுடைய நிறைகுட வாழ்வை 3 ஓட்டைப்படுத்தி ஒழுகச் செய்து விடுகின்றான்.
  • பின்னர் இறைவனை அடையாமல் கொண்டு வந்த உடலோடும் குடத்தையும் உடைத்து கொள்கின்றான், என்பதை சுட்டவே மூன்று ஓட்டைகள் போடப்படுகின்றன.
  • தண்ணீர்க் குடமென்பது சரீரம் அதில் நிறைந்த தண்ணீர் ஆன்மா.
  • இந்த மூன்று ஆசைகளாகிய ஓடைகளின் வழி சரீரத்திலிருந்து ஆன்மா தன்மயம் ஆகிய உயிர் சிந்தி விட்டது.
  • இறந்தவன் தன் வாழ்வைத் தாங்கி நின்ற உயிரை இழந்தவுடன் உடலெனும் குடத்தினையும் இன்றோடு உடைத்து விட்டான் என்பதை இது குறிக்கும்.

முற்றும்.

ஜீவசங்கரி

மரபுவழி மரனக்கிரியை கட்டுரைத்தொடர் இத்துடன் நிறைவடைகிறது. திருத்தங்கள் பின்னூட்டங்கள் இருப்பின் தெரிவிக்கத் தயங்க வேண்டாம். ஏனெனில் மரபு வழி மரணகிரியை முறைகள் நாளுக்கு நாள் எமது பகுதியில் அழிந்து கொண்டு வருவதை அனைவரும் உணர்ந்திருப்பீர்களென நம்புகிறேன். எமது பாரம்பரியத்தை நாம் தான் பேணவேண்டும்.

தொடர்புகளுக்கு mattuweb@gmail.com எனும் மின்னஞ்சலை பயன்படுத்தவும். அல்லது mattakalappu.com எனும் முகப்புத்தகத்தில் தொடரவும்.
-மட்டுநகர்_ திவா

-மட்டக்களப்பு இணையம்

Share this Article
Leave a comment